Published : 05 Jun 2021 03:04 PM
Last Updated : 05 Jun 2021 03:04 PM
தெலங்கானா மாநிலத்தில் கரோனா பாதிப்பால் இறந்ததாக அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி ஒருவர் 10 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீண்டுவர அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
தெலங்கானா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ளது கிறிஸ்டியன்பேட். அப்பகுதியைச் சேர்ந்தவர் கிரிஜாம்மா (75). இவருக்குக் கடந்த மே 12ம் தேதி கரோனா உறுதியானது. இதனையடுத்து அவர் விஜயவாடாவில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதன்பின்னர் கடந்த 15ம் தேதி கிரிஜாம்மாவின் கணவர் கட்டய்யா மருத்துவமனைக்குச் சென்று மனைவியின் நலனை விசாரிக்க முற்பட்டுள்ளார். ஆனால், கிரிஜாம்மாவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதனால், மருத்துவமனை தரப்பில் பிணவறையில் கிரிஜாம்மாவின் சடலம் இருக்கிறதா எனப் பார்க்கச் சொல்லியுள்ளனர். கட்டய்யா அங்கு சென்று தேடியுள்ளார். பிணவறையிலிருந்து ஒரு சடலம் அவரின் மனைவிபோலவே இருக்க அவர் அதுதான் தனது மனைவி என அடையாளம் காட்டியிருக்கிறார்.
இதனால், மருத்துவமனையும் அந்த சடலத்தை கட்டய்யாவிடம் ஒப்படைத்துவிட்டு, கிரிஜாம்மாவின் பெயரில் இறப்புச் சான்றிதழும் வழங்கிவிட்டது. குடும்பத்தினர் அந்த சடலத்தைக் கொண்டு அடக்கம் செய்தனர். கடந்த 23ம் தேதி கட்டய்யாவின் மகன் ரமேஷ் கரோனாவால் பலியானர். அன்றைய தினம், கட்டய்யா தனது மனைவி கிரிஜாம்மா மற்றும் மகன் ரமேஷுக்கு சேர்த்தே இறுதிச்சடங்கை ஏற்பாடு செய்தார்.
இதற்கிடையில் கிரிஜாம்மா கரோனாவிலிருந்து மீண்டார். யாரும் தன்னை அழைத்துச் செல்ல மருத்துவமனைவ் வராததால் அவர் வீட்டுக்குத் தனியாகவே திரும்பினார். அவருக்கு மருத்துவமனை தரப்பில் ரூ.3000 பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அவரது வருகையால் ஒட்டுமொத்த கிராமமும் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. அப்போதுதான் மருத்துவமனையிலிருந்து வேறொருவரின் சடலம் மாற்றி ஒப்படைக்கப்பட்டது தெரியவந்தது. தற்போது அந்த வயதான தம்பதி மகனின் இழப்பால் வாடிவருகின்றனர்.
ஆனாலும், மருத்துவமனையில் அலட்சியத்தாலேயே தான் தனது மனைவி என நினைத்து வேறொருவரின் சடலத்தைப் பெற்றுவந்ததாகவும், பிணவறை ஊழியர்கள் மிகவும் கடுமையாக நடந்து கொண்டனர் என்று வேதனை தெரிவித்தார். கிரிஜாம்மா வார்டிலிருந்து வெளியே சென்றதைக்கூட உறுதிப்படுத்தாமல் அவர் இறந்திருக்கலாம் என மருத்துவமனை ஊழியர்கள் தன்னைக் குழப்பிவிட்டதாகவும் அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT