Published : 05 Jun 2021 02:50 PM
Last Updated : 05 Jun 2021 02:50 PM
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கிற்கு ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த நீல நிற டிக் வசதியை ட்விட்டர் நிறுவனம் இன்று காலை திடீரென நீக்கியது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கையை திரும்பப் பெற்றது.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இரண்டு ட்விட்டர் கணக்குகளை பயன்படுத்தி வருகிறார். ஒன்று அவரது பெயரில் உள்ள சொந்த கணக்கு. மற்றொன்று குடியரசுத் தலைவர் என்ற அலுவலக பயன்பாட்டிற்கான ட்விட்டர் கணக்கு.
ட்விட்டர் வலைதளம் ஒருவரின் ட்விட்டர் கணக்கை உறுதி செய்யும் வகையில் நீல நிற டிக் வழங்கும் முறை பயன்படுத்தி வருகிறது. இந்தநிலையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கிற்கு ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த நீல நிற டிக் வசதியை ட்விட்டர் நிறுவனம் இன்று காலை திடீரென நீக்கியது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் ட்விட்டரின் நடவடிக்கையை விமர்சித்தனர். மத்திய அரசின் புதிய ஐ.டி. சட்டம் தொடர்பாக மோதல் உள்ள நிலையில் இந்த நடவடிக்கையை ட்விட்டர் நிறுவனம் எடுத்ததா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.
கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் வெங்கய்ய நாயுடுவின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கிற்கு மீண்டும் நீல நிற டிக் வழங்கப்பட்டு உள்ளது.
நீல நிற டிக் திரும்ப பெறப்பட்டது குறித்து விளக்கம் அளித்த ட்விட்டர் நிறுவனம் கடந்த சில மாதங்களாக கணக்கு பயன்பாட்டில் இல்லாததால் நீல நிற டிக் திரும்பப் பெறப்பட்டதாக பதில் அளித்துள்ளது. வெங்கய்ய நாயுடு தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23-ம் தேதி தான் கடைசியாக பயன்படுத்தி உள்ளார். நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் இருந்ததால் நீல நிற டிக் திரும்பப் பெறப்பட்டதாக தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT