Published : 04 Jun 2021 10:48 PM
Last Updated : 04 Jun 2021 10:48 PM
கரோனா வைரஸ் பரவல் காரணமாக 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண்கள் வழங்குவது என்பது குறித்து மதிப்பீடு செய்ய 13 பேர் கொண்ட குழுவை சிபிஎஸ்இ வாரியம் இன்று அமைத்துள்ளது.
இந்தக் குழு தனது அறிக்கையை அடுத்த 10 நாட்களுக்குள் வழங்கும்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் 12-ஆம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்து குழப்பம் நிலவி வந்தது. கடந்த செவ்வாய்கிழமை பிரதமர் மோடியின் தலைமையில் நடந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் 12-ஆம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்வது என முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
ஆனால், மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண்கள் வழங்குவது, எந்த அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தவந்தது. இந்நிலையில் மதிப்பெண்கள் வழங்குவது குறித்து மதிப்பீடு செய்ய 13 பேர் கொண்ட குழுவை சிபிஎஸ்இ வாரியம் அமைத்துள்ளது.
இதுகுறித்து 13 பேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், சிபிஎஸ்இ தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறுகையில் “ கரோனா வைரஸ் காரணமாக உறுதியற்ற சூழல்கள் நிலவியதாலும், பல்வேறு தரப்பிலிருந்து கருத்துக்களைப் பெற்றும், 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை இந்த ஆண்டு நடத்த முடியாது என முடிவு செய்யப்பட்டது.
ஆனால், மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை குறிப்பிட்ட காலவரையறைக்குள், நன்கு திட்டமிட்ட மதிப்பீடு அளவுகோல்கள் மூலம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் இந்த மதிப்பீடு முறையை முடிவு செய்ய 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அடுத்த 10 நாட்களுக்குள் தங்களின் அறிக்கையை சிபிஎஸ்இ கல்விவாரியத்திடம் வழங்கும்.
இந்தக் குழுவில் மத்திய கல்வித்துறை இணையச் செயலாளர் விபின் குமார், டெல்லி கல்வித்துறை இயக்குநர் உதித் பிரகாஷ் ராய், கேந்திரியா வித்யாலயா சங்காதான் ஆணையர் நிதி பாண்டே, நவோதயா வித்யாலயா சமிதி ஆணையர் வினாயக் கார்க், சண்டிகர் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ருபிந்திரஜித் சிங் பிரார், சிபிஎஸ்இ இயக்குநர்(ஐடி) அந்தி்க்ஸ் ஜோரி, சிபிஎஸ்இ இயக்குநர் ஜோஸப் இமானுவேல். யுஜிசி, என்சிஇஆர்டி அமைப்பிலிருந்து தலா ஒருவர், பள்ளிகள் தரப்பிலிருந்து இரு பிரதிநிதிகள் ஆகியோர் குழுவில் இடம் பெறுவார்கள்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT