Published : 04 Jun 2021 05:48 PM
Last Updated : 04 Jun 2021 05:48 PM
கரோனா வைரஸ் முதல் அலையில் தந்தையை அமரவைத்து 1200 கி.மீ. தொலைவு சைக்கிள் ஓட்டிய பிஹார் சிறுமி ஜோதி குமாரியின் தந்தை சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார். ஜோதி குமாரிக்குத் தொலைப்பேசியில் ஆறுதல் தெரிவித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அவரின் கல்விச் செலவு உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கு உதவுவதாக உறுதி அளித்துள்ளார்.
பிஹாரைச் சேர்ந்தவர் 14 வயதான ஜோதி குமாரி. இவரின் தந்தை ஹரியாணா மாநிலம், குர்கோவன் நகரில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டி வந்தார்.
2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜோதி குமாரியின் தந்தை விபத்தில் சிக்கியதையடுத்து, அவரால் ஆட்டோ ஓட்ட முடியவில்லை. இதையடுத்து பிஹாரிலிருந்து குர்கோவன் வந்த ஜோதி குமாரி தந்தைக்கு உதவி செய்து வந்தார். அந்த சமயத்தில் கரோனா தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
வீட்டு வாடகை கொடுக்கப் பணம் இல்லாததால், பழைய சைக்கிள் ஒன்றை விலைக்கு வாங்கிய ஜோதி குமாரி, தனது தந்தையை அமரவைத்து குர்கோவன் நகரிலிருந்து தனது சொந்த மாநிலமான பிஹாருக்குப் புறப்பட்டார். ஏறக்குறைய 1,200 கி.மீ. தந்தையை சைக்கிளில் அமரவைத்து, பிஹாரில் உள்ள தார்பங்கா மாவட்டத்தில் உள்ள சிங்வாரா மண்டலத்தில் உள்ள சிர்ஹூலி கிராமத்துக்கு ஜோதி குமாரி வந்து சேர்ந்தார்.
ஜோதி குமாரியின் சைக்கிள் பயணம் பற்றி அறிந்தபின் நாடு முழுவதும் அவருக்குப் பாராட்டுகள் குவிந்தன. இந்திய சைக்கிள் பெடரேஷன் சார்பில் பிரதமர் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதும் ஜோதி குமாரிக்கு வழங்கப்பட்டது. அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்பின் மகளும் ஜோதி குமாரியை ட்விட்டரில் பாராட்டியிருந்தார்.
தந்தைக்காக 1200 கி.மீ. பயணம் செய்து முதல் அலையில் அவரைக் காப்பாற்றிய ஜோதி குமாரியால் 2-வது அலையில் அவரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. சமீபத்தில் ஜோதி குமாரியின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்தார். இந்தச் செய்தி அனைவரின் மனதையும் வேதனைப்படுத்துவதாக இருந்தது.
இந்தச் செய்தியைக் கேட்டறிந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஜோதி குமாரியைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்தார், அது மட்டுமல்லாமல் கல்விச் செலவுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
இதுகுறித்து ஜோதி குமாரி நிருபர்களிடம் கூறுகையில், “என்னுடன் பிரியங்கா காந்தி தொலைப்பேசியில் பேசி, என் தந்தை மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார். என்னுடைய படிப்புச் செலவுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதாகவும் தெரிவித்தார். கல்விச் செலவோடு மற்ற செலவுகளையும் அவரே கவனிப்பதாகவும் தெரிவித்தார். என் தந்தை எவ்வாறு இறந்தார் என்று பிரியங்கா காந்தி கேட்டறிந்தார். என்னுடைய சகோதரர், சகோதரி நிலை குறித்தும் கேட்டார். என்னைச் சந்திக்க விருப்பமாக இருப்பதாகவும் பிரியங்கா காந்தி கூறினார்” எனத் தெரிவித்தார்.
தார்பங்கா காங்கிரஸ் தலைவர் மஸ்கூர் அகமது உஸ்மானி கூறுகையில், “பிரியங்கா காந்தி என்னிடம் இரங்கல் கடிதத்தையும், சானிடைசர், முகக்கவசம், மருந்துகளைக் கொடுத்து ஜோதி குமாரியிடம் வழங்குமாறு தெரிவித்தார். ஜோதி குமாரியிடம் பொருட்களை வழங்கியபின் பிரியங்கா காந்தி அவருடன் பேசி இரங்கல் தெரிவித்தார். ஜோதி குமாரியின் கல்விச் செலவுக்கு உதவுவதாகவும் பிரியங்கா காந்தி தெரிவித்தார். கரோனா கட்டுப்பாடுகள் முடிந்தபின் ஜோதி குமாரியை டெல்லிக்கு அழைத்துவருமாறு பிரியங்கா காந்தி கூறியுள்ளார்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT