Published : 04 Jun 2021 03:54 PM
Last Updated : 04 Jun 2021 03:54 PM
பிரதமர் மோடியை கொல்லப்போவதாகக் கூறி, டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குப் பேசி மிரட்டல் விடுத்த டெல்லியைச் சேர்ந்த 22 வயது இளைஞரை போலீஸார் இன்று கைது செய்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் போதைக்கு அடிமையானவர் என்று தெரியவந்தது.
இதுகுறித்து டெல்லி போலீஸார் தரப்பில் கூறுகையில் “ டெல்லி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 11 மணி அளவில் ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான் பிரதமர் மோடியைக் கொல்லப் போகிறேன் என்று மிரட்டல் விடுத்து தொலைப்பேசி இணைப்பைத் துண்டித்துவிட்டார்.
இதையடுத்து, தொலைப்பேசியில் பேசிய நபரி்ன் தொலைப்பேசி எண்ணை கண்டுபிடித்தபோது, வடகிழக்கு டெல்லியில் உள்ள கஜூரி காஸ் பகுதியிலிருந்து அந்த நபர் பேசியது தெரியவந்து. உடனடியாக தனிப்படை போலீஸார் அந்த இடத்துக்கு விரைந்து தொலைப்பேசியில் பேசிய நபரின் வீட்டுக்குச் சென்று அவரைப் பிடித்தனர்.
அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் அந்த நபர் பெயர் சல்மான் என்ற அர்மான் என்பது தெரியவந்தது. கொலைக் குற்றத்துக்காக கடந்த 2018-ம் ஆண்டுவரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சல்மான் தண்டனை அனுபவித்தார். அங்கிருந்து சல்மான் விடுதலையாகியுள்ளார்.
போதைப் பழக்கத்துக்கு அடிமையான சல்மான், தொலைப்பேசியில் பேசுவதற்கு முன், அவருக்கும், அவரின் தந்தைக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இரவு 7 மணிக்கு போதை மருந்து சாப்பிட்ட சல்மான் அதன்பின் போதை மருந்து வாங்குவது தொடர்பாக தனது தந்தையுடன் தகராறு செய்துவிட்டு, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்புச் செய்து பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சல்மானிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், தான் வெளியே இருக்க விரும்பவில்லை, சிறைக்குச் செல்லவே விரும்புகிறேன் அதனால்தான் இவ்வாறு பிரதமருக்கு மிரட்டல் விடுத்தேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சல்மானை தனிப்படை பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் சல்மான் உளவுப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவார்” எனத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT