Published : 04 Jun 2021 08:22 AM
Last Updated : 04 Jun 2021 08:22 AM
தமிழகத்துக்கு ஜூன் 2 ஆம் தேதி வரை 1 கோடிக்கு மேற்பட்ட கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
முழு அரசு அணுகுமுறையின் கீழ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தடுப்பூசி திட்டத்துக்கு கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் மத்திய அரசு உதவி வருகிறது. தடுப்பூசிகள் கிடைப்பதை ஒழுங்குமுறைப்படுத்துவதற்காக, தடுப்பூசி தயாரிப்பாளர்களுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பலவிதமான கொள்முதல் வாய்ப்புகளை கடந்த மே 1ம் தேதி முதல் ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
தமிழகத்தில் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை.
* 2021 ஜூன் 2ம் தேதி வரை, 1 கோடிக்கும் மேற்பட்ட கோவிட் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 93.3 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மாநிலங்களிடம் 7.24 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் தற்போது உள்ளன.
* ஜூன் மாதத்தில் தமிழகத்துக்கு மத்திய அரசு இலவசமாக வழங்கும் தடுப்பூசிகளின் மொத்த டோஸ்கள் பற்றிய தகவலும் தமிழகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
* 2021 ஜூன் மாதத்தின் முதல் 2 வாரத்தில் தமிழகத்துக்கு 7.48 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கும். அடுத்த 2 வாரத்தில் கூடுதலாக 18.36 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசின் மூலமாக கிடைக்கும்.
* மொத்தம் கிடைக்கும் கோவிட் தடுப்பூசிகளின் அளவு, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் சராசரி நுகர்வு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 18 வயது முதல் 44 வயதுடையவர்களுக்கு புதிய தாராளமய விலை நிர்ணயம் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட கொவிட்-19 தடுப்பூசி உத்தியின் கீழ், தமிழகத்துக்கு கிடைக்கும் தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை குறித்தும் தமிழகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* மூன்றாவது கட்ட தடுப்பூசி திட்டத்தில், 18 முதல் 44 வயது உடையவர்களுக்கு, 2021 ஜூன் மாதத்தில் 16.83 லட்சம் தடுப்பூசிகள் கிடைக்கின்றன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT