Published : 03 Jun 2021 03:12 AM
Last Updated : 03 Jun 2021 03:12 AM
கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தேசிய நதிநீர் திட்ட வளர்ச்சி அமைப்பைச் சேர்ந்த குழுவினர் தெலங்கானாவில் உள்ள தும்முகூடம், அகினேபள்ளி, மற்றும் ஆந்திராவில் உள்ள போலவரம் போன்ற இடங்களில் ஆய்வு செய்தனர். இதேபோன்று, தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் இக்குழு பல இடங்களில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது, அகினேபள்ளியிலிருந்து கோதாவரி - காவிரி நதிநீர் திட்டத்தை தொடங்கலாமென இக்குழு அறிக்கை தயார் செய்தது. இதை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு கடந்த 2019-ம்ஆண்டு மார்ச் மாதம் அனுப்பி வைத்தது. ஆனால் இத்திட்டத்துக்கு எந்த மாநிலமும் செவிசாய்க்கவில்லை. இதனால் இத்திட்டம் அடுத்த கட்டத்துக்கு நகராமல் இருந்தது.
இந்நிலையில், நதிநீர் இணைப்பு திட்டக் குழுவின் கூட்டம் அதன் தலைவர் ராம் தலைமையில் நடைபெற்றது. இதில் இத்திட்டத்தை தெலங்கானாவின் அகினேபள்ளி பகுதிக்கு பதில் இச்சம்பள்ளியில் இருந்து தொடங்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
இதற்கு அந்தக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது, அதன்படி இச்சம்பள்ளியிலிருந்து, தமிழகத்தின் கல்லணை வரையிலான கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்துக்கு வரைபடம் தயாரித்து அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழகத்துக்கு 84 டிஎம்சி
தெலங்கானா அரசின் அறிவுரையின் படி, இச்சம்பள்ளியிலிருந்து கோதாவரி நதிநீரை இணைக்கும் திட்டம் தொடங்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை உள்ள 143 நாட்களில் 247 டிஎம்சி தண்ணீர் விடுவிக்கப்படும். இதில் வீணாகும் நீர் போக மீதமுள்ள 230 டிஎம்சி நீரில் தெலங்கானாவுக்கு 65.8 டிஎம்சியும், ஆந்திராவுக்கு 79.92 டிஎம்சியும், தமிழகத்துக்கு 84.28 டிஎம்சி நீரும் கிடைக்கும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த திட்ட அறிக்கையில், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் கருத்துகளை தேசிய நதிநீர் மேம்பாட்டு அமைப்பு (என்டபுள்யுடிஏ) வெளியிட்டுள்ளது. அதன்படி, தமது மாநிலத்துக்கு ஏற்கெனவே தண்ணீர் பற்றாக்குறை உள்ளது எனவும், இது ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் மேலும் அதிகரிக்கும் என்றும் சத்தீஸ்கர் மாநில அரசு தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தண்ணீர் தேவை எவ்வளவு என்றும், மீதமுள்ள தண்ணீரின் நிலைப்பாடு குறித்தும் மத்திய அரசே முடிவு எடுக்க வேண்டுமென தெலங்கானா அரசு வலியுறுத்தி உள்ளது. இதை ஏற்கும் வரை விழிப்புணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட இயலாது எனவும் தெலங்கானா அரசு தெரிவித்துள்ளது.
இதேபோல கர்நாடக அரசும் தனது கருத்தை தெரிவிக்கவில்லை. இந்த திட்டத்துக்கு ஆந்திரா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதேநேரம் தனது கருத்தையும் இன்னும் தெரிவிக்கவில்லை.
ஆனால், தமிழக அரசு மட்டும் உடனடியாக விழிப்புணர்வு ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் உடனடியாக கையெழுத்திட்டு திட்டத்தை தொடங்க வேண்டுமென தனது கருத்தை பதிவு செய்துள்ளது.
திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்
கோதாவரி நதியிலிருந்து ஆண்டுதோறும் 247 ஆயிரம் மில்லியன் கன அடி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது.
கோதாவரி நதி - நாகார்ஜுன சாகர் அணை - சோமசீலா அணை - காவிரி நதி வரை பைப்லைன் மூலம் அமல்படுத்தப்படும். கோதாவரி, கிருஷ்ணா, பென்னா நதிகள் மூலமாக காவிரிக்கு தண்ணீர் கொண்டு வரப்படும்.
மகாராஷ்டிர மாநிலம், நாசிக் பகுதியில் உள்ள திரிம்பகேஷ்வரில் உருவாகும் கோதாவரி நதி, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திர மாநிலங்கள் வழியாக பயணித்து வங்கக் கடலில் கலக்கிறது.
பிரவரா, பூர்ணா, மஞ்சரா, பென் கங்கா, வர்தா, வைன்கங்கா, பிரானஹிதா (வைன்கங்கா, பென்கங்கா, வர்தா இணைந்தது), இந்திராவதி, மானேர் மற்றும் சபரி ஆகியவை கோதாவரியின் கிளை நதிகள் ஆகும்.
இதேபோல காவிரி நதி கர்நாடக மாநிலத்தின் தென்மேற்கில் உள்ள பிரம்மகிரி மலைப்பகுதியில் உருவாகிறது. பின்னர் அங்கிருந்து தென்கிழக்கு திசையில் பயணமாகி தமிழகத்தில் கடலூரின் தென் பகுதியில் வங்கக் கடலில் கலக்கிறது. இந்த நதி பல கிளைகளாக பயணம் செய்கிறது. இதனால் இதனை தென்னிந்தியாவின் பூங்கா என அழைக்கிறார்கள்.
அர்க்காவதி, ஹேமாவதி, லட்சுமண தீர்த்தம், ஷிம்சா, கபினி மற்றும் ஹாரங்கி ஆகியவை காவிரி நதியின் கிளைகள் ஆகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT