Published : 01 Jun 2021 04:22 PM
Last Updated : 01 Jun 2021 04:22 PM
தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ 2டிஜி கரோனா மருந்தை எங்கு வாங்கலாம். இந்த மருந்தை யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம், யாரெல்லாம் தகுந்த மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்ற தகவலை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (டிஆர்டிஓ) வெளியிட்டுள்ளது.
டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-டிஜி) ஆகியவற்றின் கலவையில், டிஆர்டிஓ-அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்), டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து 2டிஜி கரோனா மருந்தை தயாரித்துள்ளது.
கடந்த 1-ம் தேதி டிஆர்டிஓ தயாரித்த 2-டிஜி மருந்தை அவசர காலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள டிசிஜிஐ அனுமதி அளித்தது. இந்த மருந்து பவுடர் வடிவில் இருப்பதால், தண்ணீரில் கலந்து குடிக்க முடியும். இந்த மருந்து உடலில் சென்று வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களை அடையாளம் கண்டுபிடித்து ஒருங்கிணைத்து, புதிதாக எந்த செல்களும் பாதிக்கப்படாமல் தடுத்து, வைரஸ் வளர்ச்சியையும் தடுக்கிறது.
இந்நிலையில் இந்த மருந்து பயன்பாடு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை டிஆர்டிஓ வெளியிட்டுள்ளது.
அதன்படி,
* டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-டிஜி) மருந்தை மருத்துவர்கள் மிதமான அளவில் கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு அதிகபட்சமாக 10 நாட்கள் வரை பரிந்துரைக்கலாம்.
* கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய், தீவிர இருதய நோய்கள், ஹெபாடிடிஸ் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு போன்ற இணை நோய் கொண்டவர்களுக்கு இந்த மருந்தை கொடுத்து சோதிக்கப்படாததால், அவர்களுக்கு இம்மருந்தை பரிந்துரைப்பதில் மருத்துவர்கள் கூடுதல் கவனம் கொள்ள வேண்டும்.
* கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த மருந்தைக் கொடுக்கக் கூடாது.
* இந்த மருந்தை எடுத்துக்கொள்ள விரும்பும் நோயாளிகள் தங்களின் உதவியாளர்கள் வாயிலாக மருத்துவமனையை டாக்டர் ரெட்டிஸ் லேபை அணுக வலியுறுத்த வேண்டும். 2DG@drreddys.com இணையதளத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அந்த வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2-டிஜி மருந்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் ஆகியோர் கூட்டாக கடந்த மே 17ல் வெளியிட்டனர். முதலில் 10 ஆயிரம் பாக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
சிறிய பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ள 2டிஜி கரோனா மருந்தைத் தண்ணீரில் கலந்து குடிக்கும் லேசான அறிகுறி கொண்ட நோயாளிகள் 2 முதல் 2.5 நாட்களில் குணமடையலாம். இதன் மூலம் ஆக்சிஜன் தேவையை 40% வரை குறைக்கலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT