Published : 01 Jun 2021 02:47 PM
Last Updated : 01 Jun 2021 02:47 PM
அலோபதி மருத்துவத்துக்கும், மருத்துவர்களுக்கும் எதிராக அவதூறு கருத்துகளை யோகா குரு பாபா ராம்தேவ் கூறியதற்கு எதிராக, டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் தங்கிப் பணியாற்றும் ரெஸிடெனட் மருத்துவர்கள் கூட்டமைப்பு மருத்துவர்கள் கருப்புப் பட்டை அணிந்து வேலையில் பங்கேற்றுள்ளனர்.
பாபா ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி ரெஸிடென்ட் மருத்துவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அலோபதி மருத்துவம், கரோனா தடுப்பூசி குறித்து யோகாகுரு பாபா ராம்தேவ் சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்திருந்தார். தடுப்பூசி குறித்து தவறான தகவல்களைக் கூறியும், அலோபதி மருத்துவத்துக்கு எதிராக அவதூறுகளைத் தெரிவித்துவரும் பாபா ராம்தேவ் மீது தேசதுரோக குற்றச்சாட்டின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவக் கூட்டமைப்பு கடிதம் எழுதியிருந்தது.
இந்திய மருத்துவ சங்கத்தின் உத்தரகாண்ட் பிரிவு, அலோபதி குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக பாபா ராம்தேவுக்கு எதிராக ரூ.1,000 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, சப்தார்ஜங் மருத்துவமனை, லேடி ஹார்டிங்கே மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஹிந்து ராவ் மருத்துவமனை, சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனை, பி.ஆர்.அம்பேத்கர் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்கள் ராம்தேவ் கருத்துக்கு எதிராக கருப்புப் பட்டை அணிந்து இன்று பணியாற்றுகின்றனர்.
ரெஸிடென்ட் மருத்துவர்கள் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் கூறுகையில், “அலோபதி குறித்துப் பேசுவதற்கு எந்தவிதமான தகுதியும் இல்லாத ராம்தேவுக்கு எதிராக இந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறோம். கரோனாவுக்கு எதிராக மருத்துவர்கள் போராடி வரும்போது, ராம்தேவின் பேச்சு மருத்துவர்களின் நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் இருக்கிறது.
எந்தவிதமான நிபந்தனையும் இன்றி ராம்தேவ் மன்னிப்பு கோர வேண்டும் அல்லது தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பாலான ரெஸிடென்ட் மருத்துவர்கள் கையில் கருப்புப் பட்டை அணிந்து எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறோம். மற்ற மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்களும் எங்களுடன் இணைவார்கள். ராம்தேவின் பேச்சு மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த வெறுப்புணர்வை உருவாக்கிவிடும்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT