Published : 31 May 2021 08:27 PM
Last Updated : 31 May 2021 08:27 PM
மேற்கு வங்க தலைமைச் செயலாளர் பந்த்யோபத்யாயேவை டெல்லி பணிக்கு வரக்கூறி மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில், அவர் இன்று ஓய்வு பெற்றார். அவரை அடுத்த 3 ஆண்டுகளுக்கு முதல்வரின் ஆலோசகராக நியமித்து முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாக உத்தரவிட்டார்.
தலைமைச் செயலாளர் பந்த்யோபத்யாயேவை செவ்வாய்க்கிழமை டெல்லியில் ஆஜராக வேண்டும் என மத்திய அரசு இன்று கடிதம் அனுப்பியது. ஆனால், மாநில அரசின் அனுமதியில்லாமல் தலைமைச் செயலாளர் மத்திய அரசுப் பணிக்குச் செல்ல முடியாது என்பதால் அவரை விடுவிக்க முதல்வர் மம்தா பானர்ஜி மறுத்துவிட்டார்.
மேற்கு வங்கத்தில் புயலால் பாதித்த பகுதிகளை ஆய்வு பிரதமர் மோடி வந்திருந்தார். அவர் ஆய்வு செய்து முடித்தபின் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் சுவேந்து அதிகாரியும் பங்கேற்க இருந்ததால், ஆத்திரமடைந்த முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை மட்டும் தனிப்பட்ட முறையில் 15 நிமிடங்கள் சந்தித்துப் பேசிவிட்டுப் புறப்பட்டார். இதைத் தொடர்ந்து மே.வங்க தலைமைச் செயலாளர் பந்த்யோபத்யாவை டெல்லி பணிக்குத் திரும்ப வரக்கூறி மத்திய அரசு உத்தரவிட்டது.
ஆனால், தலைமைச் செயலாளரை அனுப்ப மறுத்த முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு இன்று 5 பக்க அளவில் கடிதம் எழுதி, முடிவை திரும்பப் பெறக் கோரியிருந்தார். தலைமைச் செயலாளர் பந்த்யோபத்யா இன்றுடன் ஓய்வு பெற இருந்த நிலையில், கரோனா நிவாரணப் பணிகளைக் கவனிக்க அவருக்கு 3 மாதங்கள் நீட்டிப்பு வழங்கிய நிலையில் அவரை திடீரென திரும்ப அழைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
''பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாட்டின் கூட்டாட்சிக் கட்டமைப்பை அழிக்க முயல்கிறார்கள். மாநில அரசுக்கு தொடர்ந்து பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள். அவர்களால் சட்டப்பேரவைத் தேர்தலில் அடைந்த தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தலைமைச் செயலாளரைத் திரும்ப அழைக்கும் முடிவு என்பது முற்றிலும் அரசியல் பழிவாங்கும் செயல். அவர்களின் நோக்கம் மம்தா பானர்ஜி மட்டும்தான்.
ஹிட்லர், ஜோஸப் ஸ்டாலின் போல், சர்வாதிகாரிபோல் இருவரும் செயல்படுகிறார்கள். மாநில அரசின் அனுமதியின்றி குடிமைப்பணி அதிகாரியை மத்திய அரசுப் பணிக்கு மாற்ற முடியாது. நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசுகளிடமும் கேட்கிறேன், அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களிடமும் கேட்கிறேன். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், தொண்டு நிறுவனங்கள் அனைவரும் சேர்ந்து இதில் போரிடுங்கள்.
தலைமைச் செயலாளருக்கு 3 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில், அவர் இன்றுடன் ஓய்வு பெற்றுவிட்டார். அவர் அடுத்த 3 ஆண்டுகள் முதல்வரின் தனிப்பட்ட ஆலோசகராகச் செயல்படுவார். தலைமைச் செயலாளர் நாளை டெல்லிக்கு வர வேண்டும் என அவருக்குத்தான் கடிதம் அனுப்பப்பட்டது.
இது நான் அனுப்பிய கடிதத்துக்கான பதில் அல்ல. தலைமைச் செயலாளருக்கான கடிதம். மத்திய அரசுக்கு நான் இன்று அனுப்பிய கடிதத்துக்கு இதுவரை எனக்கு பதில் கிடைக்கவில்லை. தலைமைச் செயலாளரை டெல்லிக்கு அனுப்ப முடியாது. அவர் ஓய்வு பெற்றுவிட்டார். அடுத்த புதிய தலைமைச் செயலாளராக ஹெச்கே. துவிதேவி பொறுப்பேற்பார். அவரின் இடத்துக்கு பிபி கோபாலிகா நியமிக்கப்பட்டுள்ளார்''.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT