Published : 31 May 2021 05:12 PM
Last Updated : 31 May 2021 05:12 PM

ட்விட்டர் நிறுவனம் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடெல்லி 

ட்விட்டர் நிறுவனம் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் இல்லாவிடில் தடை விதிக்கலாம் எனவும் டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசு முன்பே அறிவித்த புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதில் ‘‘சமூக ஊடக நிறுவனங்கள் அதன்அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்களை வலைதளத்தில் வெளியிட வேண்டும். புகார்களைப் பெறுவது, நடவடிக்கை எடுப்பது போன்றவற்றுக்காக இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மேலும் சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய பதிவை யார் முதலில் பதிந்தது என்ற விவரத்தை பகிர்தல்’’ போன்ற விதிமுறைகள் உள்ளன.

இதற்கு ட்விட்டர் நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனம் அறிவிக்கை வெளியிட்டு இருந்தது. இதற்கு மத்திய அரசு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது.

இந்தநிலையில் வழக்கறிஞர் அமித் ஆச்சார்யா என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசு கொண்டு வந்த புதிய ஐடி விதிமுறைகளை பின்பற்ற சமூக வலைதளங்களுக்கு 3 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது. மே 25-ம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், ட்விட்டர் நிறுவனம், புகார் பெறுவதற்கான அதிகாரியை நியமிக்கவில்லை.

இது தொடர்பாக ட்வீட் மூலம் புகார் அளித்தும் பதில் ஏதும் கிடைக்கவில்லை. இதனால், இனியும் தாமதம் செய்யாமல், உடனடியாக அதிகாரியை நியமிக்க வேண்டும். புதிய விதிமுறைகளை சமூக வலைதள நிறுவனங்கள் பின்பற்றப்படுகிறதா என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

என மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி ரேகா பள்ளி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ட்விட்டர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விசாரணை அதிகாரியை நியமித்துள்ளதாக தெரிவித்தார்.

ஆனால், இதனை மறுத்த மத்திய அரசு வழக்கறிஞர், புகாரை பெறுவதற்கான அதிகாரியை ட்விட்டர் நிறுவனம் நியமிக்கவில்லை என தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நீதிபதி கூறுகையில் ட்விட்டர் நிறுவனம் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இல்லாவிடில் தடை விதிக்கலாம் என தெரிவித்தார். இந்த மனு குறித்து பதிலளிக்க மத்திய அரசு மற்றும் ட்விட்டர் நிறுவனத்திற்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x