Published : 31 May 2021 05:16 PM
Last Updated : 31 May 2021 05:16 PM
டெல்லியில் உள்ள மக்களுக்கு ஜூன் மாதம் ஸ்புட்னிக்-வி (Sputnik V)தடுப்பூசி கிடைக்கும் என நம்புகிறேன். இந்தத் தடுப்பூசி கிடைத்துவிட்டால் கரோனாவுக்கு எதிரான போரை இன்னும் வேகப்படுத்துவோம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.
டெல்லியில் உள்ள பத்திரிகையாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்தும் மையத்தை டிடியு மார்க் பகுதியில் இன்று முதல்வர் கேஜ்ரிவால் திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
''டெல்லியில் உள்ள பத்திரிகையாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்கியிருக்கிறோம். பத்திரிகையாளர்களுக்கு மட்டும் தனியாகத் தடுப்பூசி மையம் தேவை என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த மையத்தில் 18 வயது முதல் 44 வயதுள்ள அனைத்துப் பத்திரிகையாளர்கள், அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். அனைத்துப் பத்திரிகையாளர்களும் வந்து இங்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கரோனா வைரஸிலிருந்து நீங்களும், உங்கள் குடும்பத்தாரையும் பாதுகாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
டெல்லியில் அரசு மருத்துவமனைகளில் கருப்புப் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 650 பேர் சிகிச்சையில் உள்ளனர். மத்திய அரசு மருத்துவமனைகளில் 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். ஆனால், இந்தத் தொற்றுநோயைக் குணப்படுத்தும் ஆம்போடெரசின்-பி மருந்து சப்ளை குறைவாக இருக்கிறது. இந்த மருந்துகள் நேற்று முன்தினம் ஆயிரம் டோஸ் மட்டுமே கிடைத்தது. நாள்தோறும் ஒரு நபருக்கு 3 முதல் 4 டோஸ் செலுத்தப்பட வேண்டும்.
கரோனாவுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்த டெல்லி மக்களுக்கு ஜூன் மாதத்தில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கிடைக்கும் என நம்புகிறேன். ஜூன் 20ஆம் தேதிக்குப் பின் முதல் கட்ட இறக்குமதி டெல்லிக்கு கிடைக்கும். ஆகஸ்ட் மாதத்திலிருந்து உள்நாட்டிலேயே ஸ்புட்னிக் தயாராக இருக்கிறது. ஜூன் மாதம் இறக்குமதியாகும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியில் டெல்லி அரசுக்கு ஒரு பங்கு இறக்குமதியாகிறது.
டெல்லியில் கரோனா பரவல் குறைந்துள்ளதையடுத்து, இன்று முதல் லாக்டவுனைத் தளர்த்தும் முதல் கட்ட நடவடிக்கை தொடங்கியுள்ளது. கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று பலரும் பல பிரச்சினைகளைச் சந்தித்தனர். அடுத்துவரும் நாட்களில் மக்கள் சந்திக்கும் அந்தப் பிரச்சினைகள் படிப்படியாகக் களையப்படும்''.
இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT