Published : 31 May 2021 12:26 PM
Last Updated : 31 May 2021 12:26 PM
லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பிரஃபுல் கோட்டா படேலைத் திரும்பப் பெற வேண்டும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கேரள சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
லட்சத்தீவுக்குப் புதிய நிர்வாகியாக குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பிரஃபுல் கோடா படேல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். அப்போது இருந்து அவர் செய்துவரும் பல்வேறு சீர்திருத்தங்கள் லட்சத்தீவில் பூர்வகுடிகளாக வாழ்ந்துவரும் மக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிக்கும் வகையில் இருப்பதால், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக லட்சத்தீவு மேம்பாட்டு ஆணைய ஒழுங்கு முறை ஆணைய வரைவு மசோதா பெரும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது.
இந்தத் தீவில் வசிக்கும் மக்களில் 99 சதவீதத்தினர் பட்டியலினத்தவர்கள், அதிலும் பெரும்பகுதி முஸ்லிம் மக்கள்தான். அங்கு மதுக்கடைகள் மது பார் கிடையாது. குற்றங்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாகும்.
இந்நிலையில் அங்கு புதிதாகப் பல சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. அதன்படி, பள்ளிகளில் மதிய உணவின்போது வழங்கப்படும் இறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டது. மதுக்கடைகள் திறக்கவும், மது பார்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
அங்குள்ள மீனவ மக்கள் தங்கள் வலைகளைக் காயவைக்கும் இடம், படகுகளை நிறுத்தும் இடம் தடை செய்யப்பட்டது. இதுபோன்ற பல்வேறு விதமான புதிய கட்டுப்பாடுகளால் மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
லட்சத்தீவு நிர்வாகி அதிகாரி பிரஃபுல் படேலை மாற்றக் கோரி ஏற்கெனவே கேரள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.
இந்நிலையில் லட்சத்தீவு நிர்வாக அதிகாரி பிரஃபுல் படேலைத் திரும்பப் பெறக் கோரி கேரள சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டுவந்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிமுகம் செய்த இந்தத் தீர்மானத்துக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் நிறைவேறியது.
இந்தத் தீர்மானத்தை அறிமுகம் செய்து முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது:
''லட்சத்தீவில் வசிக்கும் மக்கள் மிகவும் கடினமான சூழலில் இருக்கிறார்கள். அவரின் கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவை அங்குள்ள நிர்வாக அதிகாரியின் சர்வாதிகாரப் போக்கால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. மக்களின் எதிர்ப்பை மீறி நிர்வாகி அதிகாரி செயல்பட்டு வருகிறார். மக்களின் உணவுப் பழக்கம், வாழ்வாதாரம் கூட அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.
கேரள மாநிலத்துடன் லட்சத்தீவு நீண்ட காலத்தோடு தொடர்புடையது. ஆனால், சங்பரிவார் அமைப்புகள் இந்தத் தீவைத் தங்களின் கொள்கைகளைப் பரிசோதிக்கும் சோதனைக்கூடமாகப் பயன்படுத்த முயல்கின்றன. இந்த தேசத்தின் மக்கள் இது நடக்க அனுமதிக்க மாட்டார்கள்.
லட்சத்தீவு மக்கள் அமைதியை விரும்புபவர்கள். ஆனால், நிர்வாக அதிகாரி எடுத்துவரும் நடவடிக்கைகள் மக்களை ஒதுக்கிவைக்கும் வகையில் இருக்கிறது. வளர்ச்சி என்ற பெயரில், மக்களின் வாழ்வாதாரம் கூட அச்சுறுத்தப்படுகிறது.
தென்னை மரங்கள் காவி நிறப் பூச்சு பூசப்படுகின்றன. இதை எந்தக் காரணம் கொண்டு அனுமதிக்கக் கூடாது. நிர்வாக அதிகாரியை மத்திய அரசு திரும்பப் பெற்று, அவரின் சர்ச்சைக்குரிய முடிவுகள், உத்தரவுகளைத் திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்''.
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT