Published : 31 May 2021 08:19 AM
Last Updated : 31 May 2021 08:19 AM
7 ஆண்டுகளில் பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, தனது வலுவான தலைமையால் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக பிரதமர் மோடி மாற்றியுள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.
மோடி பிரதமராக பொறுப்பேற்று நேற்றுடன் 7 ஆண்டுகள் நிறை வடைந்தன. இதையொட்டி பாஜகசார்பில் நேற்று ‘சேவை தினம்’ கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் கரோனா 2-வது அலை தீவிரமாக உள்ள நிலையில் பெரிய அளவில் கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு 7 சாதனை ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக, பிரதமரநரேந்திர மோடிக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
வளர்ச்சி, பாதுகாப்பு, பொதுமக்கள் நலன் மற்றும் முக்கிய சீர்திருத்தங்களின் ஈடுஇணையற்ற ஒருங்கிணைப்பின் தனித்துவமான உதாரணத்தை மோடி அரசு அளித்துள்ளது.
இந்த 7 ஆண்டுகளில், நரேந்திர மோடி, தனது உறுதியான, முழுமையான நலத்திட்ட கொள்கைளால், நாட்டின் நலன்தான் மிக முக்கியம் என ஒரு புறமும், மறுபுறம் ஏழைகள், விவசாயிகள் மற்றும் பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, தனது வலுவான தலைமையால் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக மாற்றியுள்ளார்.
‘‘ கடந்த 7 ஆண்டுகளாக, பிரதமர் நரேந்திர மோடியின் சேவை மற்றும் அர்ப்பணிப்பில் அசைக்க முடியாத நம்பிக்கையை நாட்டு மக்கள் தொடர்ந்து வெளிப்படுத்தினர். அதற்காக, நாட்டு மக்களுக்கு நான் தலை வணங்குகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், நாம் அனைத்து சவால்களையும் வெல்வோம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சி பயணத்தை தடைகள் இன்றி தொடர்வோம் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.
என அமித் ஷா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT