Published : 30 May 2021 04:52 PM
Last Updated : 30 May 2021 04:52 PM
கரோனா வைரஸ் பரவல் காலத்திலும் பாஜக தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறார்கள். ஆனால், சிலரோ அரசின் தடுப்பூசியைக் கேள்வி கேட்டு, அரசின் நம்பிக்கையைக் குலைத்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை மோடி தடுப்பூசி என்று விமர்சிக்கிறார்கள் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டினார்.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்து 7 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையொட்டி பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று காணொலியில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''பிரதமர் மோடி தலைமையிலான இந்த அரசு 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த நாளை சேவை நாளாக பாஜக இந்த கரோனா காலத்தில் கொண்டாடும். கோடிக்கணக்கான பாஜக தொண்டர்கள், ஒரு லட்சம் கிராமங்களில் தேவையுள்ள மக்களுக்குச் சேவை செய்து, பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கிறார்கள்.
மக்களுக்கு ரேஷன் பொருட்கள், நிவாரணப் பொருட்கள், மருந்துகள், முதியோருக்குத் தேவையான பொருட்கள், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு பாஜகவினருக்கு உத்தரவிட்டுள்ளோம்.
எங்களுடைய எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் அனைவரும் கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி ஒவ்வொருவரும் இரு கிராமங்களுக்குச் சென்று மக்கள் சேவையில் ஈடுபடுவார்கள். மேற்கு வங்க பாஜக எம்.பி. பிரவேஷ் சிங் வர்மா 7 லாரிகளில் 4 லட்சம் ஷீல்ட், 5 ஆயிரம் ரேஷன் பொருட்கள் தொகுப்பு, ஒரு லட்சம் முகக்கவசம், உள்ளிட்டவற்றை மக்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும் வழங்குகிறார்.
கரோனா காலத்தையும் பொருட்படுத்தாமல் பாஜகவினர் மக்களுக்கு உதவி செய்கிறார்கள். ஆனால், சில கட்சிகள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டன. லாக்டவுன் குறித்தும், தடுப்பூசி குறித்தும் பொறுப்பற்ற முறையில் கருத்துகளைக் கூறுகின்றன, நாட்டின் நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் பேசுகின்றன.
மத்திய அரசின் நம்பிக்கையைக் குலைக்க எதிர்க்கட்சிகள் முயல்கின்றன. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை மோடி தடுப்பூசி என்று விமர்சித்து, அதன் திறன் மீது கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால், அவர்கள்தான் தற்போது தடுப்பூசிக்காக அலைகிறார்கள்.
தொடக்கத்தில் 2 மருந்து நிறுவனங்கள் மட்டும் இருந்த நிலையில் தற்போது 13 நிறுவனங்களுக்குத் தடுப்பூசி தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. விரைவில் இது 19 நிறுவனங்களாக உயர்த்தப்படும். பாரத் பயோடெக் நிறுவனம் அக்டோபர் மாதத்திலிருந்து 10 கோடி டோஸ்கள் தாயரிக்கும்''.
இவ்வாறு ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT