Published : 29 May 2021 09:14 AM
Last Updated : 29 May 2021 09:14 AM
பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கணக்கில் வராத’ தடுப்பு மருந்து டோஸ்கள் குறித்து வெளியான சில செய்திகள் தவறானவை என மறுப்பு தெரிவித்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம் ஒரே நாளில் உற்பத்தி செய்து விநியோகித்து விட முடியாது என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
பாரத் பயோடெக்கிடம் ஆறு கோடி டோஸ்கள் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் தவறானவை.
1 கோடி டோஸ்களாக ஏப்ரலில் இருந்த உற்பத்தி, 2021 ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் 6 முதல் 7 கோடியாக அதிகரிக்கப்படும். 2021 செப்டம்பர் மாதத்தில் இது 10 கோடி டோஸ்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தடுப்பு மருந்தை உற்பத்தி செய்து, அதன் தரத்தை சோதிக்க நேரம் தேவைப்படுகிறது. ஒரே நாளில் இதன் உற்பத்தியை அதிகரித்து விநியோகித்து விட முடியாது.
2021 மே 28 காலை நிலவரப்படி, 2,76,66,860 தடுப்பு மருந்து டோஸ்களை இந்திய அரசுக்கு பாரத் பயோடெக் வழங்கியுள்ளது. இதில், 2,,20,89,880 டோஸ்கள் (வீணானவை உட்பட) மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் தற்போது 55,76,980 டோஸ்கள் உள்ளன. இதே மாதத்தில் தனியார் மருத்துவமனைகள் 13,65,760 டோஸ்கள் கோவாக்சினை பெற்றன.
2021 மே மாதத்தில், கூடுதலாக 21,54,440 கோவேக்சின் டோஸ்கள் விநியோகிக்கப்பட உள்ளன. இதன் மூலம் மொத்த தடுப்பு மருந்து விநியோகம் 3,11,87,060 டோஸ்களை எட்டியுள்ளது. ஜூன் மாதத்தில் 90,00,000 டோஸ்கள் விநியோகிக்கப்படும் என்று தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT