Published : 29 May 2021 03:11 AM
Last Updated : 29 May 2021 03:11 AM
திருமலையில்தான் அனுமன் பிறந்தார் என திருப்பதி தேவஸ்தானம் கூறுவதை ஏற்க இயலாது. இதற்கு அனைத்து பீடாதிபதிகள், மடாதிபதிகள், ஜீயர்கள் கலந்துகொண்டு விவாதிக்க வேண்டுமெனஹம்பி ஹனுமத் ஜன்ம பூமிஅறக்கட்டளையின் நிறுவனர் கோவிந்தானந்த சரஸ்வதி சுவாமிகள் கருத்து தெரிவித்துள்ளார்.
தற்போது ஹனுமன் எங்கு பிறந்தார் எனும் புதிய விவாதம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம், ஹம்பியில்தான் ஹனுமன் பிறந்தார் என அங்குள்ள ஹம்பி ஹனுமத் ஜன்ம பூமி அறக்கட்டளையினர் இத்தனை நாட்கள் கூறி வந்தனர். ஆனால், கடந்த ராம நவமியன்று, தமிழக ஆளுநரின் முன்னிலையில், திருமலையில் உள்ள் ஜபாலி தான் அனுமன் பிறந்த தலம் என்றும், 7 மலைகளில் அஞ்சனாத்ரி மலை என பெயர் வரக்காரணமே இதனால்தான் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆதாரங்களாக சில ஆவணங்களை வெளியிட்டு தெரிவித்தனர். இது தற்போது விவாதமாகி உள்ளது.
இவ்விஷயத்தை நேரில் விவாதிக்கலாம் என திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கூறப்பட்டது. இதனால், நேற்று ஹம்பி ஹனுமத் ஜன்மபூமி அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர் கோவிந்தானந்த சரஸ்வதி சுவாமிகள் மற்றும் இவரது சிஷ்யர்கள் குழுவினர் திருப்பதி வந்தனர்.
பின்னர் திருப்பதியில் உள்ள வித்யா பீடத்தில் கோவிந்தானந்தா குழுவினரும், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வேத பண்டிதர்களும் பங்கேற்றனர். இதற்கு தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டிதலைமை தாங்கினார். ஹனுமன் பிறந்த இடம் குறித்து இரு தரப்பிலும் காரசாரமான விவாதங்கள் முன் வைக்கப்பட்டன. சுமார் 3 மணி நேரம் வரை இருதரப்பிலும் விவாதங்களில் அனல் பறந்தன.
பின்னர், இது குறித்து கோவிந்தானந்தா செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘ராமாயணத்தில் ஹம்பியில்தான் ஹனுமன் பிறந்தார் என திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளது. இதனை திருப்பதி தேவஸ்தானம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. இவ்வளவு பெரியவிஷயத்தை திருப்பதி தேவஸ்தானம் அறிவிக்கும் போது ஏன்ஜீயர் சுவாமிகளை முன் வைக்கவில்லை? அதிகாரிகள் ஒன்று திரண்டு இதுபோன்ற முடிவுகளை அறிவித்து விட முடியுமா? இதனை ஏற்க இயலாது. நாளை வேற்று மதத்தை சேர்ந்த ஒரு அதிகாரி ஜீயரே தேவை இல்லை என்பார். இதனை ஏற்க இயலுமா? ஆதலால், இவ்விஷயம் குறித்து விவாதம் செய்ய அனைத்து மடாதிபதிகள், பீடாதிபதிகள், ஜீயர் சுவாமிகள் ஒன்று கூடி ஒரு முடிவுக்கு வர வேண்டும்’’ என கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT