Published : 10 Mar 2014 07:06 PM
Last Updated : 10 Mar 2014 07:06 PM
செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவர்போல காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசுகிறார் என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறினார்.
பிஹார் மாநிலம் புர்னியாவில் பாஜக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் மற்றும் பேரணியில் நரேந்திர மோடி பங்கேற்றார். இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தான் பிரதமர் ஆகி விடுவோம் என்ற கனவில் மிதக்கும் (பிஹார் முதல்வர்) நிதிஷ்குமார், இப்போதெல்லாம் சரியான தூக்கமின்றி தவித்து வருகிறார். அவரின் ஆணவம் எவரெஸ்ட் சிகரத்தை விட மிகவும் பெரியது. உலகில் தன்னைவிட சிறந்தவர் யாருமில்லை என்ற எண்ணம் அவருக்கு உள்ளது.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். ஏதோ செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவர் போல, பிறர் மீது குற்றம்சாட்டி பேசி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற ஆட்சி, அவருடைய கட்சியினுடையதா, இல்லையா என்பது பற்றி அவர் விளக்கம் அளிக்க வேண்டும். பிறர் மீது புகார் கூறும் ராகுல், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் செயல்பாடு பற்றி வாயே திறக்காமல் உள்ளது ஏன்?
ஊழல், வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட எந்த பிரச்சினைகளைப் பற்றியும் பதில் அளிக்க இளவரசர் (ராகுல்) தயாராக இல்லை. மக்களுக்கு செல்போன் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளதாக கூறுகிறீர்கள். ஆனால், அதை மின்னூட்டம் (சார்ஜ்) செய்வதற்கான மின்சாரத்தை வழங்கினீர்களா?
பிஹாரில் 2 சதவீத பள்ளிகளில் மட்டுமே கம்ப்யூட்டர் வசதி உள்ளது. அதேபோன்று ஹரியாணாவில் 40 சதவீதம் பள்ளிகளிலும், அசாமில் 7, ஹரியாணாவில் 40, மகாராஷ்டிரத்தில் 45, ராஜஸ்தானில் 22 சதவீத பள்ளிகளில் மட்டுமே கம்ப்யூட்டர் உள்ளது. குஜராத்தில் 71 சதவீத பள்ளிகளில் கம்ப்யூட்டர் வசதி உள்ளது. தன்னை அறிவுஜீவி என்று கருதிக்கொள்ளும் அமைச்சர் ஒருவர் (கபில் சிபல்), ஆகாஷ் டேப்லட் கணினி வழங்கும் திட்டம் என்னவானது என்பது பற்றி உடனடியாக பதில் அளிக்க வேண்டும். அந்த திட்டத்துக்கு செலவிட்ட பணம் எங்கே போனது?
வாஜ்பாய் ஆட்சியில் இருந்தபோது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உறுப்பினர்களாக இருந்த கட்சிகள் அனைத்துக்கும் உரிய மரியாதையும் மதிப்பும் அளிக்கப்பட்டன. இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் சம உரிமை அளிக்கும் இணக்க மான கூட்டணி, ஊழல்வாதிகளின் கூட்டணி, வன்முறையாளர்களின் கூட்டணி ஆகிய மூன்று வகையான கூட்டணிகள்தான் இப்போது உள்ளன என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT