Last Updated : 28 May, 2021 05:35 PM

18  

Published : 28 May 2021 05:35 PM
Last Updated : 28 May 2021 05:35 PM

அச்சத்தை உருவாக்கும் ராகுல் காந்தி பேச்சு; டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்: பிரகாஷ் ஜவடேகர்

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் | கோப்புப் படம்.

புதுடெல்லி

டூல்கிட் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிதான் பின்னணியில் இருக்கிறது எனும் உண்மை தெரிந்துவிட்டதால், ராகுல் காந்தியின் பேச்சு மக்களிடையே அச்சத்தை உண்டாக்குவதாக அமைந்துள்ளது. 2021, டிசம்பர் மாதத்துக்குள் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலடி கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று காணொலி வாயிலாகப் பேட்டி அளித்தார். அப்போது, மத்திய அரசின் தடுப்பூசித் திட்டம் குறித்தும், பிரதமர் மோடியின் திட்டமிடல் இல்லாத செயல் குறித்தும் கடுமையாக விமர்சித்தார். தடுப்பூசி செலுத்துவது மெதுவாகச் சென்றால் அடுத்தடுத்து கரோனா அலையை எதிர்கொள்ள நேரிடும் என ராகுல் காந்தி எச்சரித்தார்.

ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு பதில் அளித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி அளித்தார்.

அவர் பேசியதாவது:

''மத்திய சுகாதாரத்துறை, 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்துக்குள் 216 கோடி டோஸ் தடுப்பூசிகள் வர உள்ளன. 108 கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திவிடுவார்கள்.

பிரதமர் மோடியையும், தேசத்தையும் அவதூறு பரப்புவதற்காக உருவாக்கிய டூல்கிட் விவகாரத்தின் பின்னணியில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. இதற்கு ஆதாரங்கள் தேவையில்லை.

இந்த டூல்கிட் ராகுல் காந்தியால்தான் உருவாக்கப்பட்டது. அப்படிப்பட்ட வார்த்தைகளைத்தான் பயன்படுத்தியுள்ளார். அரசியலில் ஒரு பகுதியாக, மக்கள் மத்தியில் குழப்பத்தையும், அச்சத்தையும் உருவாக்க முயன்றுள்ளார். ராகுல் காந்தி பேசியவை தேசத்தையும், மக்களையும் புண்படுத்துவதாக இருக்கிறது.

இதுவரை 20 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. உலகிலேயே வேகமாகத் தடுப்பூசி செலுத்தும் நாடாக இந்தியா இருந்து வருகிறது, ஆகஸ்ட் மாதத்திலிருந்து தடுப்பூசி செலுத்தும் வேகம் இன்னும் கூடுதலாக இருக்கும்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் உள்ள நிலை பற்றி ராகுல் காந்தி கவலைப்பட வேண்டும். தடுப்பூசி தயாரிப்பாளர்களிடம் இருந்து தங்களுக்கான தடுப்பூசி அளவை அதிகரிக்க முடியாமல் இருக்கிறார்கள். தடுப்பூசியின் முக்கியத்துவத்தை ராகுல் காந்தி மட்டுமல்ல, மத்திய அரசும் தொடர்ந்து தொடக்கத்தில் இருந்தே மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. இதனால்தான் இந்தியாவில் இரு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டன.

கோவாக்சின் தடுப்பூசி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது ஆனால். இந்தத் தடுப்பூசி குறித்துப் பல சந்தேகங்களையும், பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் காங்கிரஸ் தலைவர்கள் எழுப்புகிறார்கள்''.

இவ்வாறு ஜவடேகர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x