Published : 27 May 2021 08:35 AM
Last Updated : 27 May 2021 08:35 AM
தனிநபர் தகவல் பாதுகாப்பு உரிமையை மத்திய அரசு மதிக்கிறது, மத்திய அரசு தெரிவித்துள்ள எந்த நடவடிக்கையும், வாட்ஸ் ஆப்பின் இயல்பான செயல்பாட்டை பாதிக்காது என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் விளக்கமளித்துள்ளார்.
டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள், 2021-இன் கீழ் இந்திய அரசு புதிய சட்டதிட்டங்களை அறிமுகம் செய்தது. இந்தியாவில் செயல்படும் சமூக வலைதளங்கள் இதற்கு உடன்பட நேற்றுடன் கெடு முடிந்தது. இதனால் தொடர்ந்து இந்தத் தளங்கள் இயங்க அனுமதிக்கப்படுமா என்கிற கேள்வியெழுந்தது.
புதிய தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் பயனர்களின் தனியுரிமை மீறல் தொடர்பாக, இந்திய அரசுக்கு எதிராக வாட்ஸ் அப் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் விளக்கம் அளித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது:
தனிநபர்களின் ரகசிய தகவல்களை பாதுகாப்பதை, அடிப்படை உரிமையாக மத்திய அரசு அங்கீகரிக்கிறது. அதை நாட்டின் அனைத்து மக்களுக்கும் உறுதி செய்வதில் அரசு உறுதியுடன் உள்ளது.
நாட்டு மக்கள் அனைவருக்கும் தனிநபர் தகவல் பாதுகாப்பை உறுதி செய்வதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. அதே நேரத்தில், சட்டம் மற்றும் ஒழுங்கை பாராமரிப்பது, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அரசின் கடமை.
இந்தியா தெரிவித்துள்ள எந்த நடவடிக்கையும், வாட்ஸ் ஆப்பின் இயல்பான செயல்பாட்டை பாதிக்காது. சாதாரண மக்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு இருக்காது.
நாட்டின் இறையான்மை மற்றும் பாதுகாப்புக்கு எதிரான குற்றங்கள், பொது அமைதியை சீர்குலைக்கும் குற்றங்களை தடுத்தல், 5 ஆண்டுகளுக்கு குறைவான சிறை தண்டனையுடன் கூடிய பலாத்கார மற்றும் குழந்தை பாலியல் குற்றங்கள் தொடர்பான விசாரணை மற்றும் தண்டனை போன்றவற்றுக்கு மட்டும் வழிகாட்டுதல்களின் 4(2) விதிமுறையின் கீழ், குறிப்பிட்ட தகவலை முதலில் பதிவிட்டவரை கண்டுபிடிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படலாம்.
இதுபோன்ற குற்றங்களுக்கான செயலை முதலில் செய்தவரை கண்டுபிடித்து தண்டிப்பதும் பொதுநலன்தான். கும்பல் தாக்குதல் போன்ற கலவரங்களில், நாம் இதை மறுக்க முடியாது. பொதுவில் ஏற்கெனவே உள்ள விஷயங்கள் மீண்டும் மீண்டும் வாட்ஸ் அப் தகவல் மூலம் பரப்பப்படுகிறது. ஆகையால், முதலில் தகவலை வெளியிட்டவரின் பங்கு மிக முக்கியம்.
குறியாக்கம் பராமரிக்கப்படுமா இல்லையா என்பது பற்றிய முழு விவாதமும் தவறாக உள்ளது. குறியாக்க தொழில்நுட்பம் அல்லது இதர தொழில்நுட்பம் மூலம் தனிநபர் ரகசிய பாதுகாப்புரிமை உறுதி செய்யப்படுமா இல்லையா என்பது முற்றிலும் சமூக ஊடகங்கள் நோக்கத்தை பொறுத்தது.
நாட்டு மக்கள் அனைவருக்கும் தனிநபர் ரகசிய பாதுகாப்புரிமையை உறுதி செய்வதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதேபோல், பொது ஒழுங்குக்கு தேவையான தகவலை பெறுவது மற்றும் நாட்டின் பாதுகாப்பை பாராமரிப்பதிலும் மத்திய அரசு உறுதியாக உள்ளது. குறியாக்கம் அல்லது இதர தொழில்நுட்பம் அல்லது இரண்டின் மூலம் தொழில்நுட்ப தீர்வு காண்பது வாட்ஸ் அப் நிறுவனத்தின் பொறுப்பு.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT