Published : 26 May 2021 08:37 AM
Last Updated : 26 May 2021 08:37 AM

சிபிஐ புதிய இயக்குநர்: யார் இந்த சுபோத் குமார் ஜெய்ஸ்வால் ?

சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநர் சுபோத்குமார் ஜெய்ஸ்வால் | படம் உதவி ட்விட்டர்

புதுடெல்லி

சிபிஐ அமைப்பின் இயக்குநராக அடுத்த இரு ஆண்டுகளுக்கு மத்திய தொழிற் பாதுகாப்புப்படையின் தலைவராக இருந்து வரும் சுபோத் குமார் ஜெய்ஸ்வாலை நியமித்துள்ளது மத்திய அரசு.

கடந்த பி்ப்ரவரி3-ம் தேதி சிபிஐ இயக்குநராக இருந்த ரிஷி குமார் சுக்லா ஓய்வு பெற்று சென்றபின் கடந்த 3 மாதங்களாக இயக்குநர் இல்லாமல் சிபிஐ அமைப்பு இயங்கி வந்தது. 1988ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான குஜராத் பிரிவு அதிகாரியான பிரவீண் சின்ஹா பொறுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டு கடந்த 3 மாதங்களாக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் சிபிஐ அமைப்புக்கு புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த சுபோத்குமார்?

கடந்த 1985-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான சுபோத்குமார் மகாராஷ்டிரா கேடரைச் சேர்ந்தவர். இதற்கு முன் மகாராஷ்டிரா டிஜிபியாகவும் சுபோத்குமார் பணியாற்றியுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம், தான்பாத் நகரில் கடந்த 1962-ம் ஆண்டு செப்டம் 22ம் தேதி பிறந்தவர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால், சிஎம்ஆர்ஐ பிரிவின் டி நோபிளி பள்ளியில் படித்தார். இளங்கலை பட்டமும், எம்.பி.ஏவும் முடித்த சுபோத்குமார் கடந்த 1985-ம் ஆண்டு மகாராஷ்டிரா கேடர் ஐபிஎஸ்அதிகாரியாக தேர்வானார்.

2018ம் ஆண்டில் மும்பை நகரின் போலீஸ் ஆணையராகவும் சுபோத் குமார் பணியாற்றியுள்ளார். மும்பை போலீஸ் ஆணையராக நியமிக்கப்படும் முன்,மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் பிரிவின் தலைவராகவும் இருந்தார்.

தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் தலைவராக ஜெய்ஸ்வால் இருந்தபோதுதான், மும்பையை உலுக்கிய ரூ.20ஆயிரம் கோடி போலி பத்திர தெல்ஜி ஊழல் வழக்கை விசாரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இந்த தெல்ஜி போலி முத்திரைத்தாள் ஊழலில் ஏராளமான அதிகாரிகள் சிக்கினர்.

அதன்பின் தீவிரவாதத் தடுப்புப் பிரிவின் டிஐஜியாக சுபோத்கமார் இருந்தபோதுதான், 2006ம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்தார். அதே ஆண்டில் மகாராஷ்டிராவின் கட்சிரோலி பகுதியில் மாவோயிஸ்ட்கள் அதிகம் இருக்கும் பகுதியில் அவர்களை ஒடுக்க சிறப்பு அதிகாரியாக சுபோத்குமார் நியமிக்கப்பட்டார். சுபோத்குமாரின் சிறப்பான சேவையைப் பாராட்டி 2009ம் ஆண்டு குடியுரசுத் தலைவர் போலீஸ் விருது வழங்கப்பட்டது.

அதன்பின் மகாராஷ்டிரா காவல் டிஜிபியாக சுபோத்குமார் நியமிக்கப்பட்டார், 2022ம் ஆண்டுவரை சுபோத்குமார் டிஜிபியாக பதவிக்காலம் இருந்தநிலையில் மத்தியப்பணிக்கு மாற்றப்பட்டு மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

சுபோத்குமார் மும்பை போலீஸ் ஆணையராக நியமிக்கப்படும் முன், மத்தியஅரசின் ஆராய்ச்சி மற்றும் ஆய்வு பிரிவான "ரா" பிரிவில் ஏறக்குறைய 9 ஆண்டுகள் ஜெய்ஸ்வால் பணியாற்றியுள்ளார்,அதில் 3 ஆண்டுகள் கூடுதல் செயலராக இருந்துள்ளார்.

பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன்சவுத்ரி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய குழு ஜெய்ஸ்வால் பெயரை அடுத்த சிபிஐ இயக்குநருக்குப் பரிந்துரைத்தது. அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஜெய்ஸ்வால் இந்தப் பதவியில் இருப்பார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x