Published : 25 May 2021 02:33 PM
Last Updated : 25 May 2021 02:33 PM
கரோனா பரிசோதனைக்கு மறுத்த இரு இளைஞர்களை பெங்களூரு மாநகராட்சி ஊழியர்கள் அடித்து, உதைத்து வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மத்திய பெங்களூருவில் உள்ள நாகரத்பேட்டைப் பகுதியில் உள்ள தர்மநாராயணசாமி கோயில் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இரு இளைஞர்கள் தங்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு பதிவு செய்ய மநகராட்சி முகாமுக்குச் சென்றுள்ளனர். ஆனால், இரு இளைஞர்களும் கரோனா பரிசோதனைக்கு வந்துள்ளதாகக் கூறி அவர்களி்ன் பெயரைப் பதிவு செய்த அதிகாரிகளுக்கு ஓடிபி எண் வந்துள்ளது.
ஆனால், இளைஞர்கள் இருவரும் தாங்கள் தடுப்பூசி செலுத்த பதிவு செய்யத்தான் வந்தோம், கரோனா பரிசோதனைக்கு வரவில்லை என்று ஊழியர்களிடம் தெரிவித்தனர். ஆனால், மாநகராட்சி ஊழியர்கள், இரு இளைஞர்களையும் வலுக்கட்டாயாக பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கூறினார்.
ஆனால் இரு இளைஞர்களும் தாங்கள் உடல்நலத்துடன் இருக்கும் போது பரிசோதனை செய்ய முடியாது எனத் தெரிவித்தனர். இதனால் மாநகராட்சி ஊழியர்களுக்கும், இளைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஒரு ஊழியர்கள் இரு இளைஞர்களில் ஒருவரை கடுமையாகத் தாக்கி, கீழே தள்ளி பரிசோதனைக்கு உட்படுத்த முயன்றார். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி, வைரலானது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள், மக்கள், எவ்வாறு கட்டாயப்படுத்தி ஒருவரை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்த முடியும், இளைஞர்களை தாக்கியது தவறு என்று கண்டித்தனர்.
இந்த சம்பவம் பெரிதானதையடுத்து, பெங்களூரு மாநகராட்சி ஆணையர் கவுர்வ குப்தா தலையிட்டு சமூக வலைத்தளத்தில் மன்னிப்புக் கோரினார். அவர் பதிவிட்ட கருத்தில் “ நாகரத்பேட்டையில் இளைஞர்களை தாக்கிய சம்பவத்துக்கு மன்னிப்புக் கோருகிறேன். யாரையும் கட்டாயப்படுத்தி பிசிஆர் பரிசோதனை செய்யக்கூடாது. இளைஞர்களை தாக்கியதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.
இதுதொடர்பாக துறைரீதியான விசாரணை நடத்தப்படும், காரணமான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இந்த வைரலான வீடியோவின் அடிப்படையில் போலீஸார் மாநகராட்சி ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாக்கப்பட்ட இளைஞர் கூறுகையில் “ நாங்கள் தடுப்பூசி செலுத்த பதிவு செய்யவே வந்திருந்தோம். ஆனால், ஓடிபி வந்ததால் எங்களுக்கு கட்டாயமாக பிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும் ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனால், நாங்கள் தடுப்பூசி முன்பதிவுக்குத்தான் வந்தோம், பிசிஆர் பரிசோதனைக்கு வரவில்லை எனத் தெரிவித்தோம். எங்களைக் கட்டாயப்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்த முயன்று தாக்கினர். என்னுடன் வந்த நண்பர் என்னைத் தாக்குதலில் இருந்து தடுக்க வந்தபோது அவரையும் தாக்கினர்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT