Published : 25 May 2021 01:52 PM
Last Updated : 25 May 2021 01:52 PM
கரோனா சிகிச்சையில் இருந்து மீண்டவர்கள் இதுவரை கருப்புப் பூஞ்சை, வெள்ளைப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டார்கள் என்றுதான் அறிந்திருந்தோம், புதிதாக மஞ்சள் பூஞ்சை எனும் தொற்று உத்தரப் பிரதேசம் காஜியாபாத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
அதிலும் ஒரே நபருக்கு கருப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சை ஆகிய மூன்று தொற்றுகளும் ஏற்பட்டுள்ளன.
காஜியாபாத்தைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை மருத்துவர் பி.பி.தியாகி அளித்த பேட்டியில் கூறுகையில், “காஜியாபாத் சஞ்சய் நகரைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் 3 விதமான பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நாட்டிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கலாம், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. கருப்புப் பூஞ்சை, வெள்ளைப் பூஞ்சை, மற்றும் புதிதாக மஞ்சள் பூஞ்சையாலும் பாதிக்கப்பட்டுள்ளார்.
மஞ்சள் பூஞ்சை என்றால் என்ன? அறிகுறிகள்?
மஞ்சள் பூஞ்சை தொற்றின் அறிகுறிகள், உடல் சோர்வு, பசி எடுக்காமல் இருத்தல் படிப்படியாக உடல் எடை குறைதல் ஆகியவை ஆகும். உடலில் ஏற்படும் புண்களில் இருந்து சீழ் வடிதல், காயம் மெதுவாக குணமடைதல், பார்வை மங்குதல், உடல் உறுப்புகள் செயல் இழத்தல் போன்றவை தீவிரத்தன்மையைச் சுட்டிக்காட்டும்.
மஞ்சள் பூஞ்சை நோயும் உயிருக்கு ஆபத்தானது. இதன் அறிகுறிகள் வந்தவுடனே அதை கவனித்து சிகிச்சையளிக்க வேண்டும். பலரும் இதன் அறிகுறி தெரியாமல் நோய் முற்றியபின்புதான் சிகிச்சைக்கு வருகிறார்கள். இந்த நோய்க்கு ஆம்போடெரசின்-பி மருந்து செலுத்த வேண்டும்.
எவ்வாறு பாதுகாப்பது ?
முடிந்தவரை நம்முடைய வீட்டைச் சுத்தமாக வைத்திருத்தல், பழைய உணவுகளைப் பயன்படுத்தாமல் இருத்தல், ஈரப்பதம் இல்லாமல் இடங்களைப் பாதுகாத்தல் போன்றவை பாக்டீரியா, பூஞ்சை வளராமல் தடுக்க முடியும்.
வீட்டில் உள்ள ஈரப்பதத்தை முக்கியமாக அளவிட வேண்டும். வீட்டில் அதிகமான ஈரப்பதம் இருப்பது, பூஞ்சை, பாக்டீரியா வளர்வதற்கு ஏதுவான சூழலை உருவாக்கிவிடும். கருப்பு, வெள்ளை பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சள் பூஞ்சை நோய் வரவிடாமல் தற்காக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
நோயாளியின் உறவினர் சொல்வது என்ன?
3 பூஞ்சை தொற்றாலும் பாதிக்கப்பட்ட நோயாளியை கவனித்துக் கொள்ளும் நபர் கூறுகையில், “கரோனாவால் குணமடைந்தபின் கடந்த 4 நாட்களாக நோயாளியின் ஒரு பக்க முகத்தில் வீக்கம் காணப்படுகிறது. கண்களைத் திறக்க முடியவில்லை.
மூக்கில் ரத்தம் வழிகிறது, சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் சேர்ந்து செல்கிறது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்த்தபோது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மஞ்சள் பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT