Published : 25 May 2021 12:12 PM
Last Updated : 25 May 2021 12:12 PM
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள யாஸ் புயல் அதி தீவிர புயலாகி ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே நாளை கரையை கடக்கும் என தேசிய முன்னறிவிப்பு மையம் எச்சரித்துள்ளது. பாலசோர் உட்பட 4 மாவட்டங்களுக்கு சிகப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் உருவான காற்றழுத்தம், வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறியது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து யாஸ் புயலாக மாறியுள்ளது.
இது வடமேற்கு திசையில் மேலும் நகர்ந்து அதி தீவிர புயலாக உருவெடுத்து வருகிறது. இது வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து, வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரத்தை 26ம் தேதி காலை சென்றடையும். பாரதீப் மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே இது நாளை மதியம் கரையை கடக்கும் என முன்பு தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் யாஸ் புயல் அதி தீவிர புயலாகி ஒடிசா மாநிலம் பாலாசோர் அருகே கரையை கடக்கும் என தேசிய முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது. அப்போது காற்றின் வேகம் 185 கிலோ மீ்டடர் அளவுக்கு இருக்கும் என எச்சரித்துள்ளது.
பாலசோர் உட்பட 4 மாவட்டங்களுக்கு சிகப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பாலாசோர் சுற்றுவட்டார பகுதியில் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
இந்திய விமானப்படை, 15 விமானங்களில் 950 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களையும் 70 டன் சரக்குகளையும் கொல்கத்தா, புவனேஸ்வர் மற்றும் போர்ட் பிளேயருக்கு ஏற்றிச் சென்றுள்ளது.
16 விமானங்களும், 26 ஹெலிகாப்டர்களும் உடனடித் தேவைக்காகத் தயார் நிலையில் உள்ளன. மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண பிரிவின் பத்து படைகள் ஒடிசாவின் பாலசோர் பகுதியில் முகாமிட்டுள்ளன. கிழக்குக் கடற்படை மற்றும் அந்தமான் நிக்கோபார் கடற்படையைச் சேர்ந்த 8 கப்பல்கள் பேரிடர் நிவாரணப் பொருடகளுடன் தயாராக உள்ளன.
நான்கு நீச்சல் குழுக்கள் மற்றும் பத்து வெள்ள நிவாரணக் குழுக்கள் உதவிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
#WATCH Rain lashes Odisha's Chandipur as cyclone Yaas is expected to make landfall at Balasore coast on May 26#Odisha pic.twitter.com/YBh696l2eC
இதனிடையே ஒடிசா கடலோர பகுதியில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. பூரி, கட்டாக், கேந்திரபாரா, பாலாசோர் உட்பட பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT