Published : 25 May 2021 12:06 PM
Last Updated : 25 May 2021 12:06 PM
இந்தியாவில் பரவிவரும் கரோனா வைரஸுக்கு எதிராக, நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆன்டிபாடி காக்டெயில் மருந்தை ரோச் இந்தியா மருந்து நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
‘கேஸிர்விர்மாப்’, ‘இம்டெவிமாப்’ ஆகிய இரு பெயர்களில் இந்த மருந்தை ரோச் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்கிறது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருந்தபோது அவருக்கு இந்த ஆன்டிபாடி காக்டெயில் மருந்துதான் செலுத்தப்பட்டது.
கேஸிர்விமாப், இம்டெவிமாப் ஆகிய மருந்துகளின் ஒரு டோஸ் சந்தையில் ரூ.59,750க்கு விற்பனையாகிறது. இந்த மருந்தை இந்தியாவில் சிப்லா மருந்து நிறுவனம் விற்பனை செய்கிறது.
ரோச் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “கேஸிர்விமாப் மற்றும் இம்டெவிமாப் ஆகிய இரு ஆன்டிபாடி காக்டெயில் மருந்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளோம். ஒவ்வொரு மருந்தும் 600 மில்லி கிராம் எடை கொண்டது. ஒவ்வொரு மருந்தின் விலையும் ரூ.59,750 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் இரு மருந்துகளின் அதிகபட்ச விலையாக ரூ.1,19,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு பாக்கெட் மருந்தின் மூலம் இரு நோயாளிகளுக்குப் பயன்படுத்த முடியும்.
முதல் தொகுப்பு ஆன்டிபாடி காக்டெயில் மருந்து அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் 2-வது கட்டத் தொகுப்பு மருந்து ஜூன் மாதம் நடுப்பகுதியில் அறிமுகம் செய்யப்படும். ஒரு லட்சம் டோஸ் மருந்துகள் வாங்கினால், 2 லட்சம் நோயாளிகளுக்குப் பயன்படுத்த முடியும். நாட்டில் உள்ள முன்னணி மருத்துவமனைகளில் இந்த மருந்து கிடைக்கும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்துக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு, இந்தியாவில் அவசர காலத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள அனுமதியளித்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இந்த மருந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த ஆன்டிபாடி காக்டெயில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து கரோனாவில் லேசான அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்ட பதின்வயதினர், குழந்தைகளுக்கு அதாவது 12 வயதுக்கு உட்பட்டவர்கள், வயதில் மூத்தவர்களுக்கும், உடல் எடை 40 கிலோவுக்குக் குறைவாக இருப்போருக்கும் செலுத்தலாம்.
இந்தப் பிரிவினர் கரோனா உறுதி செய்யப்பட்டபின், இந்தப் பிரிவினர் அதிகமான பாதிப்புக்கு உள்ளாவார்கள் என மருத்துவர்கள் கணிக்கும் பட்சத்தில் இந்த மருந்தைச் செலுத்தலாம். இந்த மருந்தின் மூலம் குழந்தைகள், முதியோரைப் பெரும் இடரிலிருந்து மீட்க முடியும், உயிரிழப்பை 70 சதவீதம் தடுக்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT