Published : 25 May 2021 08:39 AM
Last Updated : 25 May 2021 08:39 AM
கரோனா 3-வது அலையில் குழந்தைகள் கடுமையாகவோ அல்லது அதிகமாகவோ பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்தவிதமான அறிவியல் பூர்வமான ஆதாரங்களும், அறிகுறிகளும் இல்லை என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்தார்.
கரோனா வைரஸ் முதல் அலையில் வயதில் முதியோர் அதிகமான பாதிப்புக்கு ஆளாகினர், 2-வது அலையில் நடுத்தர வயதுப்பிரிவினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அடுத்துவரும் 3-வது அலையில் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக உலகளவில் பல்வேறு மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இது குறித்து எய்ம்ஸ் இயக்குநர் மருத்துவர் ரன்தீப் குலேரியாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து பேசியதாவது:
கரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள் கடுமையாகவோ அல்லது அதிகமாகவோ பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இதுவரை இல்லை. ஆனால், அடுத்துவரும் அலையில் அதிகமானோர் பாதி்க்கப்படலாம்.
அதேநேரம் கரோனா வைரஸ் பாதிப்பால், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது, பாலின கல்வியில் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது, மனஅழுத்தம், மனரீதியான சிக்கல்கள் குழந்தைகளுக்கு அதிகரித்துள்ளன, ஸ்மார்ட்போனை சார்ந்திருத்தல் அல்லது அடிமையாகுதல், கல்வி கற்பதில் பல்வேறு இடையூறுகள் போன்ற சிக்கல்கள், பாதிப்புகள் குழந்தைகளுக்கு ஏற்பட்டுளளது. அதிலும் கிராமங்களில் உள்ள குழந்தைகளின் கல்வி மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கரோனா முதல் மற்றும் 2-ம் அலையில் புள்ளிவிவரங்களைப் பார்த்தால் ஒன்று போலத்தான் இருக்கிறது, குழந்தைகள் பெருமளவு பாதுக்காக்கப்பட்டுள்ளனர்.ஒருவேளை குழந்தைகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் அவர்களுக்கு லேசான அறிகுறிகளுடன் மீண்டுள்ளனர்.
ஆதலால், குழந்தைகளை பாதிக்கும் விஷயத்தில் வைரஸ் மாற்றம் அடையவில்லை என்பதால், மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லை.
இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியோர்களைவிட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு என்ற வாதத்தை முன்வைக்கலாம். அவ்வாறு இருந்தாலும் இப்போதுவரை குழந்தைகள் பாதிக்கப்பட்டது மிகக்குறைவுதான்
அவ்வாறு மூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படலாம் என்ற வாதத்தை முன்வைத்தாலும், அதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. குழந்தைகள் கடுமையாக 3-வது அலையில் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு அறிவியல் சான்றும் இல்லை.
இவ்வாறு ரன்தீப் குலேரியா தெரிவித்தார்.
இந்திய குழந்தைகள் நலமருத்துவர் கூட்டமைப்பு கூறுகையில் “ பதின்வயதினரைவிட குழந்தைகள் கரோனாவில் பாதிக்கப்படலாம் என்ற சந்தேகம் இருந்தாலும், 3-வது அலையில் குழந்ைதகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை” எனத் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT