Published : 24 May 2021 05:17 PM
Last Updated : 24 May 2021 05:17 PM
கரோனாவால் மக்கள் உயிரிழந்து வருவதைப் பார்த்து காங்கிரஸ் கொண்டாடுகிறது. இதைத் தட்டிக் கேட்காமல் தலைவர் சோனியா காந்தி திருதராஷ்டிரர் போன்று அமர்ந்துள்ளார் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் சமீபத்தில் அளித்த பேட்டியில், “இந்தியாவில் உருமாற்றம் அடைந்த வைரஸை இந்திய வைரஸ் என்று கூறுகிறார்கள். இந்திய வைரஸைப் பார்த்து பிரதமர் மோடியும், குடியரசுத் தலைவரும் அச்சப்படுகிறார்கள். முதலில் சீன கரோனா என்று கூறிய மக்கள் இப்போது இந்திய கரோனா என்று கூறுகிறார்கள். கரோனா 2-வது அலையில் மத்தியப் பிரதேசத்தில் ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளார்கள்.
ஆனால், உண்மையான கணக்கை வெளியிட அரசு மறுக்கிறது. சிங்கப்பூர் அரசு இந்திய மக்களுக்குத் தடை விதித்துள்ளது. சிங்கப்பூர் கல்லூரியில் இடம் கிடைத்துப் படிக்கச் சென்ற இந்திய மாணவருக்கு இடம் மறுக்கப்பட்டதாகத் தகவல் வந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
மூத்த தலைவர் கமல்நாத் பேச்சுக்கு பாஜக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மக்களுக்கு பீதி ஏற்படுத்தும் வகையில் பேசியதற்காக பாஜகவினர் அளித்த புகாரில் அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவும் செய்துள்ளனர்.
இந்நிலையில் முதல்வர் சிவராஜ் சவுகான் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறுகையில், “நாங்கள் மக்களுக்குச் சேவை செய்வதில் பரபரப்பாக இருக்கும்போது, காங்கிரஸ் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்க்கிறது. இதற்கு கமல்நாத் பதில் அளிக்க வேண்டும். இந்த நேரத்தில் அனைவரும் ஒன்றாக இருந்து கரோனாவை ஒழிக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் கட்சியினரோ மக்களின் உயிரிழப்பைக் கொண்டாடுகிறார்கள்.
இந்த இக்கட்டான நேரத்தில் அரசுக்கு உதவுவதற்கும், ஒத்துழைப்பதற்கும் பதிலாக கமல்நாத் மாநிலத்தில் அராஜகத்தைப் பரவுகிறார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இதையெல்லாம் பார்த்துக் கொண்டு மகாபாரத்தில் வரும் திருதராஷ்டிர மகாராஜா போன்று ஏதும் தெரியாததுபோல் அமர்ந்திருக்கிறார். இந்திய கரோனா வைரஸ் என்று கமல்நாத் கூறியதை சோனியா ஏற்கிறாரா? ஏற்காவிட்டால் சோனியா காந்தி ஏன் அமைதியாக இருக்கிறார்?அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். கமல்நாத் கூறியதை ஏற்றுக்கொண்டால் மக்களிடம் கூறுங்கள்.
மக்களின் ஒத்துழைப்புடன் மாநிலத்தில் கரோனா பரவலைக் குறைத்து வருகிறோம். தற்போது மாநிலத்தில் 7ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்”.
இவ்வாறு சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT