Published : 24 May 2021 01:45 PM
Last Updated : 24 May 2021 01:45 PM
கரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கிட உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் ரீபக் கான்சல், கவுரவ் குமார் பன்சல் இருவரும் இந்த மனுவைத் தாக்கல் செய்தனர்.
வழக்கறிஞர் ரீபக் கான்சல் தன்னுடைய மனுவில், “தங்களுடைய குடும்ப உறுப்பினர் எந்த நோயால் உயிரிழந்தார், இறப்புக்கான காரணம் என்ன என்பதை அரசின் அதிகாரபூர்வ ஆவணங்கள் அடிப்படையில் அறிந்துகொள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு உரிமை இருக்கிறது.
ஆனால், கரோனாவால் உயிரிழந்ததாகக் கூறப்படும் நபர்களுக்கு இதுவரை உடற்கூறு ஆய்வு செய்து கரோனாவால்தான் உயிரிழந்தார்களா என்று மருத்துவர்கள் ஏதும் சான்றளிக்கவில்லை. எந்த உடற்கூறு ஆய்வும் செய்யப்படவில்லை.
ஆதலால், உயிரிழந்தவர் எந்தக் காரணத்தால் உயிரிழந்தார் என்பது குறித்த இறப்புச் சான்றிதழையும், அல்லது கடிதத்தையும் அந்தந்த மாநில அரசுகள் வழங்கிட உத்தரவிட வேண்டும்.
தேசிய பேரிடர் மீட்பு நிதி, மாநில பேரிடர் மீட்பு நிதியில் மத்திய அரசு செய்த திருத்தப்பட்ட பட்டியல், விதிகளின்படி, 2005 பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் 12-வது பிரிவின்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும்’’ என்று கோரியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆர். ஷா முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில், “கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் இருக்கிறதா என்பதை மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு இருந்தால் ஒரே மாதிரியான சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்.
கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ஒரே மாதிரியான இறப்புச் சான்றிதழோ அல்லது வேறு அதிகாரபூர்வ ஆவணமோ வழங்காவிட்டால் உயிரிழந்தவரின் உறவினர், குடும்பத்தினர் எந்தவிதமான நிவாரண உதவியையும், இழப்பீட்டையும் பெற முடியாது.
இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். வழக்கை ஜூன் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம்” எனத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT