Published : 24 May 2021 11:03 AM
Last Updated : 24 May 2021 11:03 AM
தடுப்பூசி விற்பனை இந்திய அரசுடன் மட்டும்தான் மேற்கொள்வோம், மாநில அரசுகளுடன் வர்த்தகம் செய்ய முடியாது என்று மாடர்னா மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
18 வயது முதல் 44 வயது உள்ள பிரிவினருக்கு தடுப்பூசிகளை அந்தந்த மாநில அரசுகள் வெளிச்சந்தையிலிருந்து கொள்முதல் செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, பல மாநிலங்களும், சர்வதேச டெண்டர் மூலம் வெளிநாடுகளில் இருந்தும் தடுப்பூசிகளை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இதில் பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு, அமெரிக்காவில் இருந்து மாடர்னா நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசியை வாங்க கோரியிருந்த நிலையில் அந்த நிறுவனம் தடுப்பூசி சப்ளை செய்ய மறுத்துவிட்டது.
இதுகுறித்து பஞ்சாப் அரசின் தடுப்பூசிக் கொள்முதலுக்கான அதிகாரி விகாஸ் கார்க் வெளியிட்ட அறிக்கையில் “ ஸ்புட்னிக் வி, பைஸர், மாடர்னா, ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் ஆகிய மருந்து நிறுவனங்களிடம் நேரடியாக தடுப்பூசிக் கொள்முதல் செய்ய முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவுப்படி அணுகினோம். இதற்காக சர்வதேச அளவில் ஒப்பந்தப் புள்ளிகள் வெளியிட்டு தடுப்பூசிக் கொள்முதல் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
ஆனால், மாடர்னா மருந்து நிறுவனம் எங்களுக்கு அனுப்பி பதிலில் தடுப்பூசி விற்பனையை இந்திய அரசுடன் மட்டும்தான் வைத்துக்கொள்வோம். எங்கள் நிறுவனத்தின் கொள்கையின்படி, மாநில அரசுகளுடனும், எந்த தனியார் அமைப்புகளுடனும் தடுப்பூசி விற்பனையை செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளது” எனத் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்கெனவே தடுப்பூசிப் பற்றாக்குறை நிலவுவதால், முதல்கட்டம் மற்றும் 2-ம் கட்டம், மற்றும் 3-ம் கட்ட தடுப்பூசிப் பணிகளை நிறுத்துவதாக பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. தடுப்பூசிகளை கொள்முதல் செய்து, பற்றாக்குறை இல்லாத சூழல் வந்தபின், தடுப்பூசி செலுத்தும் பணி விரைவாகத் தொடங்கும், இதுவரை 44 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளோம்.
பஞ்சாபில் 3-வது கட்ட தடுப்பூசி திட்டத்துக்கு (18வயதுமுதல் 44வயதுவரை) இதுவரை 4.20 லட்சம் டோஸ் தடுப்பூசி மட்டுமே வாங்கப்பட்டுள்ளது, இதில் 66 ஆயிரம் டோஸ்கள் நேற்று வந்துள்ளன. எஞ்சியுள்ள 3.65 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவிட்டன. தற்போது 66 ஆயிரம் டோஸ்கள் மட்டுமே உள்ளன.
இவ்வாறு கார்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT