Published : 24 May 2021 10:34 AM
Last Updated : 24 May 2021 10:34 AM
பாரத் பயோடெக் நிறுவனம் தனது கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு வழங்கி பரிசோதிக்கும் திட்டத்தை வரும் ஜூன் மாதத்திலிருந்து தொடங்க உள்ளது.
இந்த தகவலை பாரத் பயோடெக் நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டு மற்றும் சர்வதேசப் பிரிவின் தலைவர் மருத்துவர் ராச்செஸ் எலா தெரிவித்தார்.
தற்போது கரோனாவுக்கு எதிராக இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்ட் மருந்துகள் மட்டுமே மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த இரு மருந்துகளும் 18- வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் செலுத்தப்பட்டு வருகிறது. 18-வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு செலுத்தப்படவில்லை.
முதல்முறையாக 2 வயதுமுதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் மருந்து பரிசோதிக்கப்பட உள்ளது. இந்த நிறுவனம் 2-வது கட்டம் மற்றும் 3-வது கட்ட கிளிக்கல் பரிசோதனைகளை நடத்திக்கொள்ள மத்திய மருந்துத் தரக்கட்டுப்பாடு அமைப்பின் வல்லுநர் குழு அனுமதியளித்துள்ளது.
இந்த பரிசோதனைகள் டெல்லி எய்ம்ஸ், பாட்னா எய்ம்ஸ், நாக்பூர் எம்ஐஎம்சி மருத்துவமனை உள்ளிட்ட 525 இடங்களில் நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் வர்த்தக மேம்பாட்டு மற்றும் சர்வதேசப் பிரிவின் தலைவர் மருத்துவர் ராச்செஸ் எலா, எப்ஐசிசிஐ சார்பில் நேற்று காணொலி மூலம் நடந்த நிகழ்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
எங்களின் கோவாக்சின் மருந்துக்கு இந்த ஆண்டின் 3-வது அல்லது 4-வது காலாண்டுக்குள் உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கும் என நம்புகிறோம். எங்கள் மருந்து மக்கள் அனைவருக்கும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது, மக்களின் உயிரை கரோனாவிலிருந்து காக்கிறது என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த மகிழச்சியான உணர்வுடனே ஒவ்வொரு நாளும் பணி முடிந்து வீட்டுக்குத் திரும்புகிறோம். எங்கள் மருந்து தயாரிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் 70 கோடி டோஸ்களாக அதிகரிக்கும்.
இன்று எங்களின் வெற்றிகரமான பயணத்துக்கு ஆதரவாக மத்திய அரசு இருப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது, ஐசிஎம்ஆர் அமைப்புடன் இணைந்து மருந்து தயாரித்துள்ளோம். எங்களிடம் ரூ.1,500 கோடிக்கு மருந்து வாங்கவும் மத்திய அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. இதனால் எங்கள் தயாரிப்பை மேலும் அதிகரிக்க ஊக்கமாக இருக்கும், எங்கள் தயாரிப்பை பெங்களூருவுக்கும், குஜராத்துக்கும் விரிவுபடுத்தியுள்ளோம்.
இப்போது நாங்கள் தயாரிக்கும் தடுப்பூசியில் 70 சதவீதம் மத்திய அரசுக்கும், 20 சதவீதம் மாநில அரசுகளுக்கும், 10 சதவீதம் தனியாருக்கு வழங்குகிறோம். எங்கள் உற்பத்தியை வேகப்படுத்தும் முயற்சியில் இருக்கிறோம்
குழந்தைகளுக்கான கோவாக்சின் மருந்தின் கிளினிக்கல் பரிசோதனை ஜூன் மாதம் தொடங்க வாய்ப்பு உள்ளது. இந்த மருந்துக்கும் நடப்பு ஆண்டின் 3-வதுகாலாண்டில் அனுமதி கிடைத்துவிடும், அங்கீகாரமும் கிடைத்துவிடும் என நம்புகிறோம். எங்களின் தயாரிப்பை அதிகப்படுத்தவே தீவிரமாக இருக்கிறோம்.
தடுப்பூசி குறித்து வாட்ஸ்அப்களில் வரும் ஆதாரமற்ற செய்திகளையும், வதந்திகளையும் மக்கள் நம்பக்கூடாது. வாட்ஸ்அப்பில் ஏராளமான வதந்திகள் வருவதால் அதை பார்க்கும் நேரத்தை குறையுங்கள், நம்பகத்தன்மையான தளத்திலிருந்து, அரசின் அறிவுரைகளின்படி செயல்பட வேண்டும்.
பெரும்பகுதியான மக்களுக்கு தடுப்பூசி செலுத்திவிட்டாலே கரோனா வைரஸ் பரவுவது குறைந்துவிடும், மக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைத்துவிடும். இவ்வாறு ராச்செஸ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT