Published : 24 May 2021 03:10 AM
Last Updated : 24 May 2021 03:10 AM
மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி பதவியேற்று மே 30-ம் தேதி 7 ஆண்டுகள் நிறைவடைகிறது. கரோனா காரணமாக இந்த ஆண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்ய பாஜக தலைமை முடிவு செய்துள்ளது.
கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதிலும் நரேந்திர மோடி அலை வீசியது.இதன்காரணமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டு விழாவையும் பாஜக தலைமை விமரிசையாகக் கொண்டாடி வருகிறது. இந்த முறை கரோனா 2-வது அலை காரணமாக ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக மே 30-ம்தேதி 7-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களை ரத்து செய்ய பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. இதற்கு பதிலாக பாஜக ஆளும் மாநிலங்களில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
மாநில நிர்வாகிகளுக்கு கடிதம்
இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அனைத்து மாநில பாஜக தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். ‘கரோனாவினால் பல குடும்பங்கள் சிதைந்துள்ளன. இந்த நேரத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக பாஜக மாநில அரசுகள் நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
இதுதொடர்பான வழிமுறை களை பாஜக ஆளும் மாநிலங்கள் விரைவில் வெளியிடும். மற்ற மாநிலங்களில் பாஜகவினர் மேற்கொள்ள வேண்டிய நலத்திட்டங்கள் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குவோம்’ என்று கடிதத்தில் நட்டா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டும் இல்லை
கரோனா காரணமாக கடந்த ஆண்டும் பாஜக தலைமை கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை. எனினும், மத்திய அரசின் நலத்திட்டங்களை விளக்கும் சாதனை அறிக்கையை அச்சிட்டு வெளியிட்டது. இதற்கு முன்பு ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மாநிலங்களிலும் பாஜகவினர் பொதுக்கூட்டங் களையும் செய்தியாளர் சந்திப்பு களையும் நடத்தினர். இவற்றில் மத்திய அமைச்சர்களும் பாஜக வின் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT