Published : 23 May 2021 11:52 AM
Last Updated : 23 May 2021 11:52 AM
அலோபதி மருத்துவம் முட்டாள்தனமான அறிவியல் என்று அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசிய யோகா குரு பாபா ராம்தேவுக்கு எதிராக டெல்லி மருத்துவக் கூட்டமைப்பு(டிஎம்ஏ) போலீஸில் புகார் அளித்துள்ளது.
இந்திய மருத்துவக் கூட்டமைப்பு(ஐஎம்ஏ) பாபா ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பி நிபந்தனையற்ற எழுத்துபூர்வ மன்னிப்புக் கேட்க வலியுறுத்தியுள்ளது.
யோகா குரு பாபா ராம்தேவ் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று அலோபதி மருத்துவம் குறித்து அவதூறாகப் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் “ அலோபதி மருத்துவம் என்பது முட்டாள்தனமான அறிவியல் என்றும் லட்சக்கணக்கான மக்கள் அலோபதி மருத்துவத்தால்தான் உயிரிழக்கிறார்கள். ரெம்டெசிவிர், ஃபேபிஃப்ளூ உள்ளிட்ட மற்ற மருந்துகள் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டும் அவை கரோனா நோயாளிகளைக் காக்கவில்லை” என ஆதாரமற்ற தகவல்களைத் தெரிவித்தார்.
பாபா ராம்தேவின் பேச்சுக்கு இந்திய மருத்துவக் கூட்டமைப்பு நேற்று கண்டனம் தெரிவித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியது.
அந்த அறி்க்கையில், “ யோகா குரு பாபா ராம்தேவ் தொடர்ந்து அறிவியலுக்குப் புறம்பாக, அலோபதி மருத்துவத்துக்கு எதிராக, அதுபற்றி முழுமையாகத் தெரியாமல் கூறி மக்களைத் தவறாக வழிநடத்தி வருகிறார்.
அலோபதி மருத்துவம் குறித்து எந்தப் பயிற்சியும், அனுபவமும் இல்லாமல் பேசும் கருத்துகள், நாட்டின் கற்றறிந்த சமூகத்துக்கு அச்சுறுத்தலாகவும், அவரின் கருத்துகளுக்கு ஏழை மக்கள் நம்பும் சூழலும் இருக்கிறது. அவர் மீது தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்” எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் டெல்லி மருத்துவக் கூட்டமைப்பு (டிஎம்ஏ) சார்பில் பாபா ராம்தேவ் பேசிய பேச்சுக்கு தார்யாகாஞ்ச் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்தப் புகாரில், “ இந்த இக்கட்டான நேரத்தில் இந்த தேசமே கரோனா தொற்றுக்கு எதிராகப் போராடி வருகிறது.
தங்களுக்கு இருக்கும் வசதியை வைத்து மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், தன்னுடைய சுயநலனுக்காகவும், லாபத்துக்காவும் நவீன மருத்துவத்தையும், அறிவியலையும் பாபா ராம்தேவ் அவதூறு செய்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து தார்யாகாஞ்ச் போலீஸ் நிலைய அதிகாரி கூறுகையில் “ டிஎம்ஏ சார்பில் அளிக்கப்பட்ட புகாரைப் பெற்றுக்கொண்டோம். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே இந்திய மருத்துவக் கூட்டமைப்பு சார்பில் பாபா ராம்தேவுக்கு சட்டரீதியான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அலோபதி மருத்துவம், நவீன அறிவியல் குறித்து ஆதாரமற்றவகையில் அவதூறாகப் பேசியதற்கு பாபா ராம்தேவ் எழுத்துபூர்வமாக மன்னிப்புக் கோர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பதஞ்சலி யோகபீடம் அறக்கட்டளை சார்பில் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் “ யோகா குரு பாபா ராம்தேவ், அவருக்கு வாட்ஸ்அப்பில் வந்த செய்தியை படித்துக் காட்டினார், அது வைரலாகிவிட்டது.
அந்த நிகழ்ச்சியில் பலதரப்பட்ட நபர்களும் பங்கேற்றிருந்தனர். கரோனா காலத்தில் இரவு பகல்பாராமல் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள் பணியை மதிக்கிறது, வணங்குகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT