Published : 22 May 2021 10:26 AM
Last Updated : 22 May 2021 10:26 AM

தென்மேற்கு பருவமழை;  கரோனா காலத்திலும் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள தயாராக வேண்டும்: மத்திய அரசு வலியுறுத்தல்

கோப்புப் படம்

புதுடெல்லி

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிவாரண ஆணையர்கள், பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர்கள் ஆகியோருடன் ஆண்டு கூட்டத்தை காணொலி காட்சி மூலம் மத்திய உள்துறை அமைச்சகம் நடத்தியது.

முக்கியமாக, இந்தாண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் இயற்கை பேரிடர் ஏற்பட்டால், அதை எதிர்கொள்வதற்கான தயார்நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது. இந்த கூட்டத்துக்கு மத்திய உள்துறை செயலாளர் தலைமை வகித்தார்.

தனது துவக்க உரையில், ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார் நிலையை உறுதி செய்யும் வகையில் திறன்களை மேம்படுத்துவதன் அவசியத்தை மத்திய உள்துறை செயலாளர் வலியுறுத்தினார். கனமழை அல்லது வெள்ளம் ஏற்பட்டால், மருத்துவமனைகள், ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் ஆகியவற்றை பாதுகாப்பதில் கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ளும்படி அவர் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார்.

கரோனா தொற்றுக்கு இடையில் வெள்ளம், புயல், பூகம்பம் போன்ற இயற்கை பேரிடர்கள் காரணமாக ஏற்படும் இழப்புகளை குறைக்க, மத்திய, மாநில அரசு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மத்திய உள்துறை செயலாளர் கேட்டுக் கொண்டார்.

தேசிய தொலை உணர்வு மையம் உருவாக்கிய அவசரநிலை மேலாண்மைக்கான தேசிய தரவுகள் 4.0-ஐ மத்திய உள்துறை செயலாளர் வெளியிட்டார். இது நாட்டில் பேரிடர் பாதிப்பை குறைக்க, முன்னறிவிப்பு மையத்தின் எச்சரிக்கைகளை ஒருங்கிணைத்து, மாவட்ட அளவில் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுக்கு அனுப்ப உதவியாக இருக்கும்.

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரிடர் தயார்நிலை, முன்கூட்டிய எச்சரிக்கை முறைகள், வெள்ளம்/ஆறு/அணை மேலாண்மை, பேரிடர் மேலாண்மை திட்டங்கள் தொடர்பான பிரச்னைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x