Published : 22 May 2021 10:05 AM
Last Updated : 22 May 2021 10:05 AM
கேரளாவில் தொடர்ந்து அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அங்கு ஊரடங்கு நடவடிக்கையை மேலும் ஒரு வாரம் நீட்டித்து முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 8-ம் தேதி முதல் கேரளாவில் தீவிரமான ஊரடங்கு, கடும் கட்டுப்பாடுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த லாக்டவுன் 23ம் தேதியுடன் முடியும் நிலையில் அதை மேலும் ஒரு வாரத்துக்கு அதாவது 30ம் தேதி வரை முதல்வர் நீட்டித்துள்ளார்.
கேரளாவில்கடந்த 24 மணிநேரத்தில் 29,673 பேருக்கு தொற்று ஏற்பட்டது, 142 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களி்ல் கடந்த 16ம் தேதி முத்தடுப்பு ஊரடங்கு நடவடிக்கை அமலில் இருந்து வருகிறது, அது 22ம் தேதி(இன்று) காலையுடன் முடிந்துவிடும். ஆனால், மலப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்று குறையவில்லை என்பதால், அங்கு மட்டும் முத்தடுப்பு லாக்டவுன் இருக்கும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
கேரளாவில் கரோனா வைரஸ் பரவல் மெல்லக் குறைந்து வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுகிறது. 23ம் தேதி ஊரடங்கு முடியும் நிலையில் அது 30-ம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது.
மலப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாஸிட்டிவ் ரேட்டிங் குறையவில்லை என்பதால், அங்கு மட்டும் முத்தடுப்பு லாக்டவுன் நடைமுறையில் இருக்கும். மற்ற மாவட்டங்களில் குறைந்து வருகிறது. முத்தடுப்பு லாக்டவுன் கொண்டு வரப்பட்டபின் திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் பாஸிட்டிவ் 25 சதவீதத்கும் கீழ் சரிந்துள்ளது.
நாட்டிலேயே கரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் மாநிலங்களி்ல் கேரளாவும் இருக்கிறது. உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்த தொடர்ந்து முயன்று வருகிறோம், ஆனால், தொற்று சில மாவட்டங்களில் குறையவில்லை. வரும் நாட்களில் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
18 வயது முதல் 44 வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்துவது சீரமைக்கப்படும் இந்தப் பிரிவில் உணவு மற்றும் சிவில் சப்ளை பிரிவினர், இந்திய உணவுக் கழக ஊழியர்கள், அஞ்சலக ஊழியர்கள், சமூக நீதித்துறையினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவினர், கால்நடை பராமரிப்புத் துறையினர், துறைமுக ஊழியர்கள் ஆகியோர் முன்னுரிமைபட்டியலில் சேர்க்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படும். கேரளாவிலேயே தடுப்பூசி தயாரிப்பதற்கான பல்வேறு சாதகமான வாய்ப்புகளையும் அரசு ஆய்வு செய்து வருகிறது.
இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் தெரிவி்த்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT