Published : 22 May 2021 03:11 AM
Last Updated : 22 May 2021 03:11 AM
மேற்கு வங்க தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மம்தா தோல்வி அடைந்தார். அவரது முன்னாள் சகாவான சுவேந்து அதிகாரி, பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.கடந்த மே 2-ல்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் திரிணமூல் ஆதரவாளர்கள், பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல் பற்றி அறிந்த மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் சம்பவ இடங்களுக்கு நேரில்சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்டவர்கள் அவரிடம் கதறி அழுதது பரபரப்பானது.
அதன்பின் வன்முறையை தடுக்க மம்தாவிடம் ஆளுநர் எச்சரித்தார். இதையடுத்து முதல்வர் மம்தா அமைதி காக்க கூறிய பிறகும் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. நந்திகிராமுக்கு உட்பட்ட கிராமப் பஞ்சாயத்துகள் சார்பில் இரவு, பகலாக கிராமவாசிகளே ஆயுதங்களுடன் சுய பாதுகாப்பு செய்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஒன்றான சோனாசுர் ராவை சேர்ந்த ஜாய்தேப் ஹல்தர் கூறும்போது, “சுவேந்து அதிகாரிக்கு வாக் களித்ததாக எங்களை திரிணமூல் கட்சியினர் குறி வைக்கின்றனர். 14 ஆண்டுகளுக்கு முன் நில ஆக்கிரமிப்பு போராட்டத்தில் திரிணமூல் கட்சியினருடன் சேர்ந்து இடதுசாரிகளிடம் நாங்கள் மோதும் சூழல்இருந்தது. மம்தாவின் தோல்வியால் தற்போது திரிணமூல் காங்கிரஸாருக்கு எதிராக மோதும் நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.
இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சமிக் பட்டாச்சார்யா கூறும்போது, “தேர்தல் கலவரத்தால் 24 பாஜகவினரும் அவர்கள் ஆதரவாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை கட்சித் தலைமையகத்துக்கு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் நந்திகிராமில் இருந்து வந்துள்ளன. இன்னும் கூடத் தொடரும் அச்சத்தால் பாஜகவினர் பலர் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவில்லை” என்றார்.
ஆனால் பாஜக புகாரை திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் மறுத்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT