Published : 18 Jun 2014 07:54 PM
Last Updated : 18 Jun 2014 07:54 PM
முல்லைப் பெரியாறு அணையை நிர்வகிக்கும் மூன்று பேர் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. குழுவுக்கு தலைமை ஏற்கும் மத்திய அரசின் பிரதிநிதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளார்.
கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவும், அணையை நிர்வகிக்க மூன்று உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அமைக்கவும் கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இக்குழுவின் தமிழக பிரதிநிதியாக காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் ஆர். சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். கேரள பிரதிநிதியும் நியமிக்கப்பட்டுவிட்டார். மத்திய அரசு சார்பில் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். அவர் குழுவின் தலைவராகவும் இருப்பார்.
இதுகுறித்து டெல்லியில் புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக் கப்பட்டது. கூட்டம் முடிந்தபின் செய்தி யாளர்களிடம் பேசிய மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘உச்ச நீதிமன்ற உத்தரவின்படி முல்லைப் பெரியாறு அணையை நிர்வகிக்கும் மூன்று பேர் குழுவை அமைக்க அமைச்சர வையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும்,’ என்றார்.
அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதுடன், பருவமழை காலங்களில் அணையின் நீர்மட்டம், பாது காப்பு, நீர்பங்கீடு ஆகிய விஷயங்களை இக்குழு கவனிக்கும். அணையின் பாதுகாப்பு குறித்து இரு மாநில அரசுகளுக்கும் உத்தரவுகளை பிறப்பிக்க இக்குழுவுக்கு அதிகாரம் உண்டு.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 3-ம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இக்குழுவை விரைந்து அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். அதன் தொடர்ச்சியாக மத்திய அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவு வெளிவந்ததும், கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த தேவையான பூர்வாங்க பணிகள் தொடங்கி விட்டன.
அணையின் நீர்மட்டம் 142 அடி என்று, அணை மற்றும் உபரிநீர் வழிந்தோடிகளில் குறியீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. கதவணைகளில் வண்ணம் பூசுதல், கிரீஸ் பூசுதல், பேபி அணையின் நடைபாதையை சீரமைத்தல் போன்ற பூர்வாங்க பணிகள் நடந்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT