Published : 21 May 2021 05:16 PM
Last Updated : 21 May 2021 05:16 PM

கோவிட்-19 இரண்டாம் அலை; பாதிக்கப்படும் மக்களுக்கான வசதி: மத்திய உள்துறை அறிவுறுத்தல்

புதுடெல்லி

கோவிட்-19 இரண்டாம் அலையால் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கான வசதிகளை மறுஆய்வு செய்ய வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை வழங்கியுள்ளது.

பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் மற்றும் பட்டியலினத்தவர்கள், உட்பட சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு எதிரான குற்றங்கள், ஆள் கடத்தல், ஆகியவற்றை தடுப்பதற்கும், அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துவதற்கும் மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

கோவிட்-19 தொற்று காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகள் மீது கவனம் செலுத்தும்படி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

குழந்தைகள், மருத்துவம் மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் மூத்த குடிமக்கள், பட்டியலினத்தவர் போன்ற பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு அரசு உதவிகள் கிடைப்பதில் வழிகாட்டுதல்கள் தேவைப்படலாம். அதனால் இவர்களுக்கான தற்போதைய வசதிகளை மறுஆய்வு செய்யும்படி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

காவல் நிலையங்களில் பெண்கள் உதவி மையம், மாவட்டங்களில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆகியவை தீவிரமாக செயல்படவும், மற்ற துறையினருடன் ஒருங்கிணைந்து செயல்படவும் காவல்துறையினருக்கு தெரிவிக்கும்படி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது போன்ற நடவடிக்கைகளுக்கு உதவ மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு, பல வசதிகளை தேசிய குற்ற ஆவண காப்பகம்(என்சிஆர்பி) அளித்துள்ளது. மாநிலங்களுக்கு இடையே குற்றங்கள் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ள காவல் துறைக்கு பல்நோக்கு குற்றங்கள் மைய முகமை(கிரை-மேக்) ஆன்லைன் வசதியை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போனவர்களை கண்டறிவதற்கு குற்றம் மற்றும் குற்ற கண்காணிப்பு நெட்வொர்க் அமைப்பு(சிசிடிஎன்எஸ்) , காணாமல் போனவர்கள், அடையாளம் தெரியாத உடல்களின் போட்டோக்களை சிசிடிஎன்எஸ் நெட்வொர்க் தேசிய பட களஞ்சியத்தில் தேடி பொருத்தி பார்க்கும் வசதியுடன் கூடிய ‘யுனிபை’ செயலி போன்றவற்றை என்சிஆர்பி வழங்கியுள்ளது.

காணாமல் போனவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள மத்திய குடிமக்கள் சேவை என்ற ஆன்லைன் வசதி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்படியும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை மத்திய உள்துறை அமசை்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. கோவிட்-19 சமயத்தில் மூன்றாம் பாலினத்தவரின் பாதுகாப்புக்கு சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையான செயல்பாட்டு விதிமுறைகளையும் மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மக்கள் நலனுக்காக இந்த வசதிகளை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பயன்படுத்தி வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x