Published : 20 May 2021 06:08 PM
Last Updated : 20 May 2021 06:08 PM
உத்தரப்பிரதேச சன்னி முஸ்லிம் மத்திய வஃக்பு வாரியச் சொத்துப் பட்டியலில் இடம்பெற்ற பாராபங்கி மசூதி இடிக்கப்பட்டது எப்படி? என முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசிற்கு சமாஜ்வாதி கேள்வி எழுப்பியுள்ளது.
உ.பி.யின் பாராபங்கியின் ராம் ஸானேஹி காட் தாலுகாவில் கடந்த மே 18 இல் முஸ்லிம்களின் மசூதி இடிக்கப்பட்டது. சுமார் 100 வருடங்கள் பழமையான இந்த மசூதி அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதன் மீது மார்ச் 15 இல் ராம் ஸனேஹி காட் தாலுகா நிர்வாகம் சார்பில் மசூதிக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டிருந்தது. இதற்கான பதில் கிடைக்காத நிலையில் பாராபங்கியின் செஷன்ஸ் நீதிமன்ற அனுமதியுடன் மே 18 இல் மசூதி உ.பி. அரசால் தரைமட்டமாக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை ஆராய சமாஜ்வாதி கட்சி சார்பில் அதன் எம்.எல்.சியான ராஜு யாதவ் தலைமையில் ஒரு குழு ராம் சனேஹி காட்டிற்கு நேற்று சென்றிருந்தது. இதையடுத்து, மசூதி இடிப்பில் உபி ஆளுநர் அனந்திபென் பட்டேலுக்கும், முதல்வர் யோகிக்கும் சமாஜ்வாதி சார்பில் ஒரு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதில், உ.பி.யின் முக்கிய எதிர்கட்சியான சமாஜ்வாதி, உ.பி. முதல்வர் யோகி அரசை விமர்சித்து பல்வேறு கேள்விகள் எழுப்பியுள்ளது. இடிப்பிற்கு காரணமான அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து சமாஜ்வாதி அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடுகையில், ‘இந்த 100 வருட பழமையான மசூதி, உ.பி. சன்னி முஸ்லிம் மத்திய வஃக்பு வாரியச் சொத்துப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், பாராபங்கி மாவட்ட நிர்வாகம், வஃக்பு வாரியத்திற்கு எந்த நோட்டீசும் அளிக்காமல் பிரதிவாதியும் ஆக்கவில்லை. இதன் துணை ஆட்சியர் திவ்யான்ஷு பட்டேல், மசூதி இடிப்பு குறித்த தகவலும் தெரிவிக்காதது வஃக்பு வாரிய சட்டத்தை மீறியதாகும்.
இது போன்ற விவகாரங்களை விசாரிக்க வஃக்பு வாரியத்திற்காக ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. இத்துடன் கரோனா பரவல் மற்றும் ஊரடங்கால் மே 31 வரை மசூதி இடிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
இதையும் மீறி புனித இடத்தை தரைமட்டமாக்கியது நீதிமன்ற அவமதிப்பிற்கும் உரியதாகும். எனவே, இந்த சம்பவத்தில் உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி தலைமையில் விசாரணை அமைக்கப்பட வேண்டும்.
இச்சம்பவத்திற்கு காரணமான பாரபங்கி மாவட்ட அதிகாரிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும். அவர்கள் உடனடியாகப் பணி நீக்கமும் செய்யப்பட வேண்டும்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மசூதி இடிப்பை எதிர்த்து உ.பி. சன்னி முஸ்லிம் மத்திய அவஃக்பு வாரியமும், அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியமும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளதாக ஏற்கெனவே அறிவித்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT