Published : 20 May 2021 03:27 PM
Last Updated : 20 May 2021 03:27 PM
இனி வீட்டிலேயே கரோனா பரிசோதனை செய்துகொள்ளும் வகையில் புதிய மருத்துவ உபகரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்துள்ளது.
கரோனா தொற்றை உறுதி செய்யும் ஆர்டி பிசிஆர் பரிசோதனைகள் தற்போது அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தான் செய்து கொள்ள முடிந்தது.
இனி ஒருவருக்குக் கரோனா தொற்று இருக்கிறதா இல்லையா என்ற பரிசோதனையை வீட்டிலேயே செய்துகொள்ள வழிவகை ஏற்பட்டிருக்கிறது.
இந்த சோதனை உபகரணத்துக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த உபகரணத்தை புனேவைத் தலைமையிடமாகக் கொண்ட மைலேப் டிஸ்கவர் சல்யூஷன்ஸ் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இது ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட் (rapid antigen test RAT) என்ற முறையில் செயல்பட்டு தொற்றை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் அல்லது கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமே இந்த உபகரணத்தை பரிசோதனைக்காகப் பயன்படுத்த வேண்டும் அனைவரும் பயன்படுத்தக் கூடாது என ஐசிஎம்ஆர் வழிகாட்டு நெறிமுறையையும் வெளியிட்டிருக்கிறது.
மேலும், தனிநபர்கள் இந்த உபகரணத்தைப் பயன்படுத்தி பரிசோதித்து பாசிட்டிவ் என்று வந்தால் அதை நூறு சதவீதம் உண்மையான பாசிடிவ் எனக் கருதி ஐசிஎம்ஆர் மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தனிப்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவர்களின் தகுந்த ஆலோசனையின்படி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளையில் ஆர்டி பிசிஆர் பரிசோதனையுடன் ஒப்பிடுகையில் இந்தவகை உபகரணங்கள் போலி நெகட்டிவிட்டியைக் காட்டவும் வாய்ப்புள்ளது. ஆனால், தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் உடலில் வைரஸ் லோடு அதிகாமாகி அவர் மற்றவருக்கும் பரப்பும் நிலையில் இருக்கும்போது பரிசோதனை முடிவு தவறுவதற்கு வாய்ப்பில்லை என ஐசிஎம்ஆர் தெரிவித்திருக்கிறது.
பேத்தோ கேட்ச் (PathoCatch) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கிட்டின் விலை வரிகள் உட்பட ரூ.250 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிட்டைப் பயன்படுத்துவது எப்படி?
மைலேப் கிட்டை எப்படிப் பயன்படுத்துவது என்பதை விளக்கி ஐசிஎம்ஆர் ஒரு வீடியோவும் வெளியிட்டிருக்கிறது. மைலேப் கிட் வாங்கும்போது அதில் நாசித்துவாரத்திலிருந்து மாதிரியை எடுப்பதற்கான பஞ்சுடன் கூடிய நேசல் ஸ்வேப், அதனை சேமிக்க ஏற்கெனவே திரவம் நிரப்பப்பட்ட டியூப், சோதனை அட்டை மற்றும் சோதனைக்குப் பின் உபகரணத்தை அப்புறப்படுத்தத் தேவையான பயோ ஹசார்ட் பை ஆகியன இருக்கும்.
இந்த உபகரணத்தை வாங்குவோர் Mylab Coviself அப்ளிகேஷனை மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர், ஸ்வேபைக் கொண்டு இரு நாசித் துவாரங்களிலும் குறைந்தது 5 முறையாவது மென்மையாக சுழற்றி மாதிரியை சேமித்துக் கொள்ளவும். பின்னர் அதனை திரவம் நிரப்பப்பட்ட டியூப்பில் செலுத்திவிட்டு ஸ்வேபின் எஞ்சிய பகுதியை உடைத்துவிடவும். பின்னர் அந்த திரவத்தில் இரண்டு சொட்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக சோதனை அட்டையில் உள்ள கன்ட்ரோல் (C) என்ற பகுதியில் செலுத்தவும். 15 நிமிடங்கள் வரை முடிவுக்குக் காத்திருக்கலாம். பாசிட்டிவ் என்றால் 5 முதல் 7 நிமிடங்களுக்குள் டெஸ்ட் (T) என்ற துவாரத்தில் இன்னொரு அழுத்தமான கோடு உண்டாகும். நெகட்டிவ் என்றால் கன்ட்ரோல் (C) என்ற பகுதியில் மட்டுமே கோடு இருக்கும். 20 நிமிடங்களுக்கு மேல் ஏற்படும் எந்த ஒரு முடிவும் ஏற்கத்தக்கதல்ல. அதனை புறக்கணித்துவிடலாம். சோதனை முடிந்த பின்னர் உபகரணத்தின் அனைத்துப் பகுதிகளையும் பயோ ஹசார்ட் பையில் வைத்து அப்புறப்படுத்தவும்.
ஆர்டிபிசிஆர் பரிசோதனையுடன் ஒப்பிடும்போது இந்த வகை பரிசோதனையில் சில நேரங்களில் ஃபால்ஸ் நெகட்டிவ் காட்ட வாய்ப்பு அதிகமிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், கரோனா அறிகுறி கொண்டவர்களுக்கு வைரஸ் லோடு அதிகமாக இருந்த அவர்கள் மற்றவர்களுக்கு நோய்த்தொற்றைக் கடத்தும் நிலையை எட்டியிருந்தால் நிச்சயமாக பரிசோதனை முடிவு துல்லியமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
ICMR issued Advisory for COVID-19 Home Testing using Rapid Antigen Tests (RATs). For more details visit https://t.co/dI1pqvXAsZ @PMOIndia #ICMRFIGHTSCOVID19 #IndiaFightsCOVID19 pic.twitter.com/membV3hPbX
— ICMR (@ICMRDELHI) May 19, 2021
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT