Published : 20 May 2021 02:50 PM
Last Updated : 20 May 2021 02:50 PM
தடுப்பூசித் திட்டத்தை துரித்தப்படுத்துதல், தொற்றுத் தடுப்பு வழிமுறைகளைத் தீவிரமாகக் கடைபிடித்தல் ஆகிய இரு விஷயங்களைப் பின்பற்றாவிட்டால் இந்தியாவில் கரோனா மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது என ஹைதராபாத் ஐஐடி கல்வி நிறுவனப் பேராசிரியிரும் விஞ்ஞானியுமான எம்.வித்யாசாகர் எச்சரித்திருக்கிறார்.
இத்தாலி நாட்டின் மிலன் நகரில் உள்ள சான் ரஃபேல் என்ற மருத்துவமனை வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையின் சில குறிப்புகளை சுட்டிக்காட்டி அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார்.
அந்த ஆய்வுக் கட்டுரையில், கரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் ரத்தத்தில் 8 மாதங்களில் கரோனா ஆன்ட்டிபாடிக்களின் அளவு குறைந்து தொற்று எதிர்ப்பும் குறைந்துவிடுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை சுட்டிக்காட்டியுள்ள பேராசிரியர் வித்யாசாகர், இந்தியாவில் தடுப்பூசித் திட்டத்தை துரித்தப்படுத்தாவிடில், தொற்றுத் தடுப்பு வழிமுறைகளை மக்கள் தீவிரமாகப் பின்பற்றாவிடில், கரோனா மூன்றாவது அலையைத் தவிர்க்க முடியாது என எச்சரித்துள்ளார்.
மேலும் அவர், "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்ட்டிபாடிக்கள் குறையத் தொடங்கினால், நோய் எதிர்ப்புத் திறனும் குறைய வாய்ப்புள்ளது. அப்போது ஏற்கெனவே நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு இரண்டாவது முறை தொற்று ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
அப்படி நடக்கும் பட்சத்தில் மற்றொரு புறம் கரோனா தடுப்பூசித் திட்டத்தை அரசு துரிதப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் 6 முதல் 8 மாதங்களில் இந்தியாவில் கரோனா மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது" எனக் குறிப்பிடுகிறார்.
இதை விளக்கியுள்ள பேராசிரியர் வித்யாசாகர், "இந்தியாவில் செப்டம்பர் 2020ல் கரோனா வைரஸ் உச்சம் தொட்டத்து பின்னர் அக்டோபரில் தேசிய அளவில் குறையத் தொடங்கியது. பின்னர் மார்ச் 2021ல் இருந்து மீண்டும் தொற்று வேகமெடுத்துள்ளது.
முதல் அலைக்குப் பின்னர் தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்தி, கரோனா தடுப்பு நடைமுறைகளை மிகமிகக் கடுமையாகப் பயன்படுத்திருந்தால் இப்போது இரண்டாவது அலை ஏற்பட்டிருக்காது என நாங்கள் நம்புகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு நிகரான கருத்தை பிரதமரின் அறிவியல் ஆலோசகரான கே.விஜயராகவனும், கடந்த மே 5 அளித்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார்.
கரோனா வைரஸ் வேகமாக உருமாறுகிறது. அதனால், கரோனா மூன்றாவது அலையைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்தார்.
அவருடைய கருத்து அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவர், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநிலங்கள், மாவட்டங்கள், மாநகரங்கள் எனப் பகுதிவாரியாக தீவிரப்படுத்தினால் மூன்றாவது அலையைத் தவிர்க்கலாம் என்று கூறியிருந்தார்.
அதில் முன்னெச்சரிக்கை, கண்காணிப்பு, கட்டுப்பாட்டுப் பகுதிகளை அதிகரிப்பதையும் தடுப்பூசி திட்டத்தை வேகப்படுத்துவதையும் அவர் முக்கியமானதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தற்போது மூன்றாம் அலை குறித்து மற்றுமொரு விஞ்ஞானி எச்சரித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT