Last Updated : 19 May, 2021 04:48 PM

4  

Published : 19 May 2021 04:48 PM
Last Updated : 19 May 2021 04:48 PM

குழந்தைகளைப் பற்றி கேஜ்ரிவால் கவலைப்படுகிறார்; சிங்கப்பூரைப் பற்றி பாஜக கவலைப்படுகிறது: மணிஷ் சிசோடியா கருத்து

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா | கோப்புப் படம்.

புதுடெல்லி

சிங்கப்பூரில் உருவாகியுள்ள உருமாற்ற கரோனா வைரஸால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என முதல்வர் கேஜ்ரிவால் கவலைப்படுகிறார். ஆனால், சிங்கப்பூரைப் பற்றி பாஜக கவலைப்படுகிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் மத்திய அரசுக்கு நேற்று ஒரு கோரிக்கை விடுத்தார். அதில், “சிங்கப்பூரிலிருந்து புதிய வகை உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது. இந்த வைரஸால்கூட 3-வது அலை இந்தியாவில் உருவாகலாம். ஆதலால், சிங்கப்பூருக்கான விமானச் சேவையை உடனடியாக நிறுத்த வேண்டும், குழந்தைகளுக்கான தடுப்பூசி குறித்து ஆய்வு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், அரவிந்த் கேஜ்ரிவாலின் கருத்துக்கு சிங்கப்பூர் அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்தியத் தூதரை அழைத்து தனது எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்தது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் கருத்தை மத்திய அரசும் கண்டித்தது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “கரோனா வைரஸுக்கு எதிரான போரில் இந்தியாவும், சிங்கப்பூரும் கூட்டாக இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டபோது விரைந்து ஆக்சிஜன் சப்ளை செய்த சிங்கப்பூர் அரசின் செயல்கள் பாராட்டுக்குரியவை. அவர்களின் ராணுவ விமானத்தின் மூலம் ஆக்சிஜனை வழங்கி, இரு நாடுகளுக்கும் இடையிலான வலிமையான உறவை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

நன்கு தெரிந்துகொள்ள வேண்டியவர்களிடமிருந்து பொறுப்பற்ற கருத்துகள் வருவது நீண்டகால நட்புறவைச் சேதப்படுத்தும். இந்தியாவின் பிரதிநிதியாக டெல்லி முதல்வர் பேசக்கூடாது” எனக் கண்டித்தார்.

இந்நிலையில் டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலின் கருத்துக்குத் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆதரவு தெரிவித்துள்ளார்.

மணிஷ் சிசோடியா இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

“பாஜக மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாத, உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத அரசியலைத் தொடங்கியிருக்கிறது. சிங்கப்பூரில் கண்டறியப்பட்ட வைரஸ் குழந்தைகளைப் பாதிக்கும் எனத் தெரிந்துதான், குழந்தைகள் மீது அக்கறை கொண்டு, கவலைப்பட்டு கேஜ்ரிவால் நேற்று கருத்து தெரிவித்தார்.

ஆனால், பாஜக சிங்கப்பூரைப் பற்றித்தான் கவலைப்படுகிறது. பாஜகவால் குழந்தைகளுக்குத் தடுப்பூசி வழங்க முடியாது. அப்படியிருக்கும் போது, சிங்கப்பூரைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள். இது சிங்கப்பூரைப் பற்றிய பிரச்சினையில்லை, குழந்தைகளைப் பற்றிய பிரச்சினை. தங்களின் தோற்றத்தைப் பெரிதாக உலக அளவில் விளம்பரப்படுத்தவே குழந்தைகளுக்கான தடுப்பூசியை மத்திய அரசு ஏற்றுமதி செய்தது.

பாஜகவும், மத்திய அரசும் உலக அளவில் தங்களின் தோற்றத்தைப் பற்றித்தான் அக்கறைப்படுகிறார்கள். இந்தியாவில் உள்ள குழந்தைகள் நலனில் அக்கறையில்லை. இதுபோன்றுதான் லண்டனில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பற்றி மருத்துவர்களும், அறிவியல் விஞ்ஞானிகளும் எச்சரித்தார்கள். ஆனால், அதை அப்போது மத்திய அரசு கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டு, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்ததால்தான் நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

இன்று மீண்டும் மருத்துவர்களும், அறிவியல் விஞ்ஞானிகளும், உச்ச நீதிமன்றமும் 3-வது அலை குறித்து எச்சரித்துள்ளார்கள். 3-வது அலை குழந்தைகளைத் தாக்கும் ஆபத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளர்கள். ஆனால், மத்திய அரசு அதுபற்றி நினைக்கவில்லை. இது சிங்கப்பூரைப் பற்றிய பிரச்சினையில்லை. குழந்தைகளைப் பற்றிய பிரச்சினை''.

இவ்வாறு மணிஷ் சிசோடியா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x