Published : 19 May 2021 02:03 PM
Last Updated : 19 May 2021 02:03 PM
கரோனா வைரஸ் வேகமாகப் பரவிவரும் இந்த நேரத்தில் தடுப்பூசி தயாரிக்க அதிகமான மருந்து நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும் என்று மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் மட்டுமே மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றன. கோவாக்சின் மருந்தை பாரத் பயோடெக் நிறுவனமும், கோவிஷீல்ட் மருந்த சீரம் நிறுவனமும் தயாரிக்கின்றன. வேறு எந்த நிறுவனங்களும் தயாரிப்பில் ஈடுபடவில்லை என்பதால், பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது.
கடந்த 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்தலாம் என்று மத்திய அரசு கூறினாலும் பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறையால் அந்த திட்டம் தொடங்குவதில் தாமதம் நிலவுகிறது.
இந்நிலையில் மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி காணொலி வாயிலாக ஒரு கருத்தரங்கில் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
“தடுப்பூசியின் தேவை சப்ளையைவிட அதிகரித்தால், நிச்சயம் பிரச்சினையை உருவாக்கும். ஒரு நிறுவனம் மட்டுமே தடுப்பூசி தயாரிக்கிறது. இதற்கு பதிலாக 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்குத் தடுப்பூசி தயாரிக்கும் உரிமையை வழங்கிட வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் 2 அல்லது 3 மருந்து ஆய்வுக்கூடங்கள், மருந்து நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவர்களிடம் தடுப்பூசிக்கான ஃபார்முலாவை வழங்கி தயாரிப்பை விரைவுபடுத்த வேண்டும்.
அவர்களுக்குத் தேவையான ராயல்டி தொகையை வழங்கிவிடலாம். நாட்டில் தடுப்பூசியை அதிகமாக சப்ளை செய்ய வேண்டும். சப்ளை உபரியாக மாறிவிட்டால், அதன்பின் தடுப்பூசியை ஏற்றுமதி செய்யலாம். இதை 15 முதல் 20 நாட்களுக்குள் செய்துவிட முடியும்”.
இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தடுப்பூசி பற்றாக்குறை இருப்பது குறித்து பேசியதற்கு காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “தடுப்பூசி தேவை மற்றும் சப்ளையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்க அதிகமான நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க வேண்டும் என நிதின் கட்கரி தெரிவிக்கிறார்.
நாட்டுக்குத் தற்போது தடுப்பூசி அதிகமாகத் தேவை என்பதுதான் பிரச்சினை. ஆனால், பாஜக போலியான டூல்கிட்டை சப்ளை செய்கிறது. பாஜகவைச் சேர்ந்த ஒரு அமைச்சர் உண்மை நிலவரத்தை அறிந்து விழிப்புடன் பேசுவது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. இந்த நிர்வாக முறையை விழிப்படையச் செய்ய இன்னும் எத்தனை பேர் உயிரிழக்க வேண்டும்” எனக் கேட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்ரில் பதிவிட்ட கருத்தில், “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடந்த ஏப்ரலில் பிரதமர் மோடிக்கு கரோனா சிக்கல் குறித்துக் கடிதம் எழுதி ஆலோசனை வழங்கியிருந்தார். ஆனால், உங்கள் பாஸ் இதை கவனிப்பாரா?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிதின் கட்கரி பதில்
நிதன் கட்கரியின் பேச்சு சமூக வலைதளத்தில் வைரலானவுடன் இதற்கு ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “சுவதேசி ஜாக்ரன் மான்ஞ் நடத்திய ஒரு கருத்தரங்கில் நேற்று பங்கேற்றேன். அப்போது தடுப்பூசி தயாரிப்பை வேகப்படுத்த சில ஆலோசனைகளை வழங்கினேன்.
ஆனால், மத்திய ரசாயன உரத்துறை அமைச்சர் மன்சுக் எல்.மண்டாவியா ஏற்கெனவே தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்த எடுத்த முயற்சிகள் குறித்து நான் அறிந்திருக்கவில்லை. இந்தக் கூட்டம் முடிந்தபின் என்னிடம் வந்து, மத்திய அரசு 12 நிறுவனங்களுக்குத் தடுப்பூசியைத் தயாரிக்க அனுமதித்துள்ள தகவலைத் தெரிவித்தார்கள்.
மத்திய ரசாயனத்துறை அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகள் பற்றி அறியாமல் கருத்து தெரிவித்தேன். சரியான திசையில் அமைச்சகம் செல்வதற்குப் பாராட்டுகள்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT