Last Updated : 19 May, 2021 01:08 PM

34  

Published : 19 May 2021 01:08 PM
Last Updated : 19 May 2021 01:08 PM

‘டெல்லி முதல்வர் இந்தியாவின் பிரதிநிதியாகப் பேசக்கூடாது’- சிங்கப்பூர் வைரஸ் விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கண்டிப்பு

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் | படம் உதவி: ட்விட்டர்.

புதுடெல்லி

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இந்தியாவின் பிரதிநிதியாகப் பேசக்கூடாது என்று சிங்கப்பூரின் உருமாற்ற கரோனா வைரஸ் குறித்துப் பேசியதற்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் மத்திய அரசுக்கு நேற்று ஒரு கோரிக்கை விடுத்தார். அதில், “சிங்கப்பூரிலிருந்து புதிய வகை உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது. இந்த வைரஸால்கூட 3-வது அலை இந்தியாவில் உருவாகலாம். ஆதலால், மத்திய அரசுக்கு நான் சில கோரிக்கைகளை முன்வைக்கிறேன்.

முதலாவதாக சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்து விமானச் சேவைகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான மாற்று வழிகளை ஆராய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அரவிந்த் கேஜ்ரிவாலின் கருத்துக்கு சிங்கப்பூர் அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அந்த அறிக்கையில், “சிங்கப்பூரில் புதிய உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் உருவாகியுள்ளதாக சிலர் கூறும் கருத்துகள் உண்மைக்கு மாறானாவை. சிங்கப்பூரில் எந்தவிதமான புதிய உருமாற்ற கரோனா வைரஸும் இல்லை.

கடந்த சில வாரங்களாக சிங்கப்பூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் இருப்பது இந்தியாவில் உருவானதாகக் கூறப்படும் பி.1.617.2 வகை வைரஸ்தான். வைரஸ்களின் வளர்ச்சி, பகுப்பு குறித்த ஆய்வில் சிங்கப்பூரில் உள்ள பல்வேறு வைரஸ் திரள்களுடன் இந்த பி.1.617.2 உருமாற்ற வைரஸுக்குத் தொடர்பு இருக்கிறது என்ற பரிசோதனையில் தெரியவந்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆதாரமற்ற தகவல்களை நம்பி சிங்கப்பூர் உருமாற்ற கரோனா வைரஸ் என்று அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதற்கு சிங்கப்பூர் அரசு கடும் கண்டனம் தெரிவித்து, இந்தியத் தூதரை அழைத்து தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “அரவிந்த் கேஜ்ரிவாலின் கருத்துக்கு சிங்கப்பூர் அரசு கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது. இன்று காலை இந்தியத் தூதரை அழைத்து டெல்லி முதல்வர் கூறிய சிங்கப்பூர் உருமாற்ற கரோனா வைரஸ் குறித்து அதிருப்தியும், கண்டனமும் தெரிவித்தது.

கரோனா உருமாற்றம் குறித்துப் பேசவோ அல்லது விமானப் போக்குவரத்துக் கொள்கை குறித்துப் பேசவோ டெல்லி முதல்வருக்கு எந்த அதிகாரமும் இல்லை என இந்தியத் தூதர் விளக்கம் அளித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

அரவிந்த் கேஜ்ரிவாலின் ட்விட்டர் கருத்துக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ கரோனா வைரஸுக்கு எதிரான போரில் இந்தியாவும், சிங்கப்பூரும் கூட்டாக இணைந்து செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டபோது விரைந்து ஆக்சிஜன் சப்ளை செய்த சிங்கப்பூர் அரசின் செயல்கள் பாராட்டுக்குரியவை. அவர்களின் ராணுவ விமானத்தின் மூலம் ஆக்சிஜனை வழங்கி, இரு நாடுகளுக்கும் இடையிலான வலிமையான உறவை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

நன்கு தெரிந்துகொள்ள வேண்டியவர்களிடமிருந்து பொறுப்பற்ற கருத்துகள் வருவது நீண்டகால நட்புறவைச் சேதப்படுத்தும். இந்தியாவின் பிரதிநிதியாக டெல்லி முதல்வர் பேசக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x