Published : 19 May 2021 09:18 AM
Last Updated : 19 May 2021 09:18 AM
உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து அடிப்படைக் கல்வித் துறையில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் என 1,600க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதில் 90 சதவீதம் பேர் பஞ்சாயத்து தேர்தல் பணிக்காகச் சென்று உயிரிழந்துள்ளனர் என்று புகார் கூறப்படுகிறது.
உத்தரப்பிரதேச அடிப்படைக் கல்வி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் தினேஷ் சர்மா பிடிஐ நிருபரிடம் கூறுகையில் “ கடந்த ஏப்ரல்முதல் வாரத்திலிருந்து இதுவரை அடிப்படைக் கல்வித் துறையில் பணியாற்றிவந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் என 1,621 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளில் 90 சதவீதம் பேர் பஞ்சாயத்துத் தேர்தல் பணிக்காகச் சென்று உயிரிழந்துள்ளனர்.
இதில் 8 முதல் 10 பேர் வரை மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர், மற்றவர்கள் பெரும்பாலும் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 3-வது கட்ட பஞ்சாயத்து தேர்தல் நடந்தபோது, அடிப்படைக் கல்வித்துறையில் பணியாற்றிய ஆசிரியர்களில் 706 பேர் உயிரிழந்திருந்தனர். கடைசிக்கட்டத் தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை முடிந்தபோது பலி 1,600க்கும் அதிகமாகச் சென்றது.
இந்த சம்பவத்துக்குப்பின் ஆசிரியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டாலும் லக்னோ, உன்னாவ்,ரேபரேலி, பந்தம், பாஸ்தி, ஹர்தோய் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களை அழைத்து கரோனா கட்டுப்பாட்டு அறையில் பணியாற்ற வைத்து பலருக்கு தொற்று ஏற்பட்டது.
முதல்வநிவாரண நிதிக்கு இதுவரை ரூ.76 கோடி ஆசிரியர்கள் தரப்பில் வழங்கியுள்ளோம். ஆனால், ஆசிரியர்கள் உயிரிழப்புக்கு இதுவரை உ.பி. அரசு சார்பில் எந்த விதமான இரங்கலும் இல்லை.
தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியர்களுக்கு இதுவரை உ.பி. அரசு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. உயிரிழந்த ஆசிரியர்களுக்கு ரூ.ஒரு கோடி இழப்பீடு வழங்கிட வேண்டும்” எனத் தெரிவி்த்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு உ.பியின் அடிப்படைக் கல்வித்துறை அமைச்சர் சதீஸ் சந்திர துவேதி பதில் அளித்துள்ளார். அவர் விடுத்த அறிக்கையில் “ கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து உயிரிழந்த ஆசிரியர்கள் அனைவரும் தேர்தல் பணிக்காகச் சென்றுதான் கரோனாவில் பலியானார்கள் என்பதை ஏற்க முடியாது. அரசின் கணக்கின்படி, 3 ஆசிரியர்கள் மட்டுமே கரோனாவில் உயிரிழந்துள்ளனர்.
தேர்தல் பணியின் போது உயிரிழந்தால் என்ன நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்பதற்கு தெளிவான வழிகாட்டல்களை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. தேர்தல் பணியின் போது உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்கள் மாவட்ட ஆட்சியர் மூலம் சேகரிக்கப்பட்ட தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும். எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி தேர்தல் பணியில் 3 ஆசிரியர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
மற்ற ஆசிரியர்கள் வேறுகாரணங்களால் உயிரிழந்திருக்காலம், அதை மறுக்கவில்லை. ஆயிரக்கணக்கான மக்கள் கரோனாவில் உயிரிழந்தனர், அதில் ஆசிரியர்களும் இருந்திருக்கலாம். அவர்களும் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் அவர்களுக்காக வருந்துகிறோம்.
கரோனாவில் உயிரிழந்த ஆசிரியர்களுக்கு ஊதிய நிலுவை ஏதுமின்றி உடனடியாக வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன், ஏதேனும் வி்ண்ணப்பம் இருந்தாலும் அது முறைப்படி அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அனைத்து மரணங்களையும் தேர்தலோடு தொடர்புபடுத்த முடியாது, ஏனென்றால் எங்களிடம் எந்த அளவுகோலும் இல்லை. எந்தவிதமான புள்ளிவிவரங்களும் இல்லை. துறைரீதியாக எத்தனை பேர் இறந்தார்கள் என்ற கணக்கெடுப்பு இருக்கிறதா.அப்படி எந்தக் கணக்கெடுப்பும் இல்லை. கரோனாவில் காலத்தில் உயிரிழந்த ஆசிரியர்களுக்கு நாங்கள் வருந்துகிறோம்”
இவ்வாறு கல்வித்துறை அமைச்சர் சதீஸ் சந்திர துவேதி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT