Published : 19 May 2021 03:12 AM
Last Updated : 19 May 2021 03:12 AM
உத்தரப்பிரதேசம் மீரட்டின் செயின்ட் தாமஸ் பள்ளியில் ஆசிரியர் தம்பதிகளாக இருப்பவர்கள் கிரிகெரி ரஃபேல் ரேமாண்ட் மற்றும் சோபியா. இவர்களுக்கு கடந்த ஏப்ரல் 23, 1997 -ல் ஐந்து நிமிட இடைவெளியில் இரட்டை குழந்தைகளாக ஜோஃப்ரட் வர்கீஸ் கிரிகெரி மற்றும் ரால்ஃபிரட் ஜார்ஜ் கிரிகெரி பிறந்தனர். ஒரே பள்ளி, ஒரே வகுப்பு, ஒரே வகை உடை என ஒன்றாகவே இருவரும் வளர்ந்துள்ளனர். உயர்நிலைப் பள்ளிக்கு பிறகு ஒரே கல்லூரியில் ஒரே பாடமாக கம்ப்யூட்டர் பிரிவில் பொறியியல் பட்டமும் பெற்றனர்.
பிறகு ஹைதராபாத்தின் ஒருபெருநிறுவனத்தில் ஜோஃப்ரட் வர்கீஸுக்கு வேலை கிடைத்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அதே நிறுவனத்தில் அவரது சகோதரர் ரால்ஃபிரட் ஜார்ஜுக்கும் வேலை கிடைத்துள்ளது. அதற்கான விண்ணப்பத்தில் இருவரும் சகோதரர்கள் எனக் குறிப்பிடாமலே வேலை கிடைத்தது ஆச்சரியப்பட வைத்தது. இந்நகரில் ஒன்றாக வசித்து வந்த இருவரும் கடந்த ஏப்ரல் 23-ல் தங்கள் பிறந்த நாளைகொண்டாடி உள்ளனர். இதுவேஅவர்களது கடைசி கொண்டாட்டமாகி விட்டது.
இதன் மறுநாள் ஏப்ரல் 24-ல் கரோனா தொற்று ஒரே சமயத்தில் இருவருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் ஒருவர் பின் ஒருவர் என அரை மணி நேர இடைவெளியில் உயிரிழந்து விட்டனர். நேற்று முன்தினம் ஏற்பட்ட இந்த சோக சம்பவம் ஆசிரியர்களான ரேமண்ட் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து இரட்டை சகோதரர்களின் தந்தையான கிரிகெரி ரஃபேல் ரேமண்ட் கூறும்போது, ‘‘பிறந்த நாளுக்கு பிறகு வந்த காய்ச்சலால் இருவரும் மீரட் கிளம்பி வந்து விட்டனர். அவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது அறிந்து சிகிச்சையும் அளித்தோம். இதில் அவர்களுக்கு மே 10-ல் மருத்துவப் பரிசோதனையில் கரோனா இல்லை எனத் தெரியவந்தது. எனினும், அதன் பிறகு தான் இருவரது உடல்நிலை மோசமானது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பலனளித்து வீடு திரும்புவார்கள் என நம்பினோம்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT