Published : 18 May 2021 05:57 PM
Last Updated : 18 May 2021 05:57 PM
டெல்லியில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று அறிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் 2-வது அலை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. டெல்லியில் கடந்த மாதம் 20ஆம் தேதி 28 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. இதனால் கரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து கடந்த 24 மணி நேரத்தில் 4500 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டனர். தொற்று சதவீதம் 6.5 ஆகக் குறைந்துவிட்டது.
இதையடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவர் கூறியதாவது:
''டெல்லியில் கரோனா வைரஸால் உயிரிழந்தவர் ஒவ்வொருவரின் குடும்பத்தாருக்கும் ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படும்.
பெற்றோரில் தாய் அல்லது தந்தை கரோனாவால் உயிரிழந்திருந்தாலும் அல்லது தாய், தந்தை இருவரும் கரோனாவால் பலியாகி இருந்தாலும், வீட்டிலிருக்கும் குழந்தை 25 வயது அடையும் வரை ரூ.2,500 மாத ஓய்வூதியமாகத் தரப்படும். ஆதரவற்ற நிலையில் இருக்கும் அந்தக் குழந்தையின் கல்விக்கான முழுச் செலவையும் டெல்லி அரசு பொறுப்பேற்றுக் கொள்ளும்.
குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர் அல்லது குடும்பத் தலைவர் கரோனாவால் உயிரிழந்திருந்தால் அந்தக் குடும்பத்துக்கு மாதம் ரூ.2,500 ஓய்வூதியமாக வழங்கப்படும். கரோனாவால் உயிரிழந்ததற்காக தனியாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.
கணவர் உயிரிழந்திருந்தால் மனைவிக்கு மாதம் ரூ.2500 ஓய்வூதியமும், மனைவி உயிரிழந்திருந்தால் கணவருக்கு மாதம் ரூ.2500 ஓய்வூதியமும் தரப்படும். குடும்பத்தில் திருமணமாகாத நபர், அவர்தான் வீட்டில் வருமானம் ஈட்டுபவராக இருந்து அவர் கரோனாவில் பலியாகியிருந்தால் ஓய்வூதியத் தொகை பெற்றோருக்கு வழங்கப்படும்.
இந்த அறிவிப்புகள் அனைத்தும் டெல்லி அரசின் அமைச்சரவை ஒப்புதல் பெற்றபின் நடைமுறைப்படுத்தப்படும். டெல்லியில் 72 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டுகள் அனைத்துக்கும் இந்த மாதம் 10 கிலோ இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். ஏழைகளிடமும், பொருட்கள் தேவைப்படுவோரிடமும் ரேஷன் கார்டு இல்லாவிட்டாலும் அவர்களுக்கும் இந்த மாதம் இலவசமாக 10 கிலோ ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்''.
இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT