Published : 18 May 2021 03:11 AM
Last Updated : 18 May 2021 03:11 AM
உலகில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட அதே காலத்தில்,இந்தியாவில் தடுப்பூசி ஆய்வுகளும் தயாரிப்பும் தொடங்கிவிட்டன. போரில் காயமடைந்து இறப்பவர்களைவிட தொற்றுநோயால் தங்கள் படைகள், அதிகாரிகள் கூடுதலாக மடிகிறார்கள் என்பதை பிரிட்டிஷ் காலனிய அரசு உணர்ந்தது. இதனால் இந்தியாவில் பதினைந்து தடுப்பூசி ஆய்வு - தயாரிப்பு நிறுவனங்களை நிறுவியது.
மும்பையில் தொடங்கப்பட்ட ஹாஃப்கைன் பிளேக் ஆய்வு நிறுவனம், அந்தக் கொள்ளை நோய்க்கானமுதல் தடுப்பூசியை 1897-ல் கண்டுபிடித்தது. இதே காலகட்டத்தில் காலராவுக்கான தடுப்பூசி கொல்கத்தாவில் கண்டுபிடிக்கப்பட்டது. விரைவில் டெட்டனஸ் (TT), டிப்தீரியா போன்றகொடும் நோய்களுக்கான தடுப்பூசிகளின் தயாரிப்பும் தொடங்கின.
இந்த காலனிய நிறுவனங்களில் இந்திய விஞ்ஞானிகள் சேர்த்துக்கொள்ளப்பட்டபோது காலனியக் கொள்கைகளின் காரணமாக தடுப்பூசி தயாரிப்புக்கு அழுத்தம் தரப்பட்டு ஆய்வுகள் பின்னுக்கு தள்ளப்பட்டன. அதனால், இந்தியா விடுதலை அடைந்தபோது உலகத்தரம் வாய்ந்த ஆய்வுகளுக்கு இந்த நிறுவனங்களில் இடம் இருக்கவில்லை.
1967– 1977 காலகட்டத்தில் குன்னூரில் உள்ள பாஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (பொதுத்துறை) நிறுவனம், வாய்வழியே தரப்படும் போலியோ தடுப்பு சொட்டு மருந்தை கண்டுபிடித்து, உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலைப் பெற்றது. அதன் பின்னரும் ஒரு குறிப்பிட்ட தொகுப்பு உற்பத்தியில் தரம் இல்லை எனக் கூறி அந்த நிறுவனத்தின் தயாரிப்பை அரசு நிறுத்திவிட்டது. அதன் பின்னர் இந்த சொட்டு மருந்து வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. 1990-களில் புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டபோது மேலும் பல பொதுத்துறை நிறுவனங்களின் பணிகள் முடக்கப்பட்டன.
முக்கிய இந்திய தடுப்பூசி நிறுவனங்கள்
இந்தியன் இம்யூனோலாஜிகல்ஸ் லிமிடெட், பாரத் இம்யூனோலாஜிகல்ஸ் அண்ட் பயோலாஜிகல்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட், ஹாஃப்கின் பயோ-ஃபார்மாசூட்டிகல் கார்ப் லிமிடெட், மத்திய ஆராய்ச்சி நிறுவனம் (கசௌலி), பாஸ்டர் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (குன்னூர்), பி.சி.ஜி. தடுப்பூசி ஆய்வகம் (கிண்டி) ஆகிய பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் துறையில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா லிமிடெட், பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட், சாந்தா பயோடெக், பனேசியா பயோடெக் லிமிடெட், சி.பி.எல். பயோலாஜிகல்ஸ் முதலியவையும் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
உலகில் உள்ள சுமார் 65% குழைந்தைகள் சீரம் நிறுவனத்தின் ஏதாவது ஒரு தடுப்பூசியையாவது எடுத்துக்கொண்டிருப்பார்கள். ஒரு ஆண்டில் சுமார் 150 கோடி தடுப்பூசிகளை இந்த நிறுவனம் தயாரிக்கிறது. உலகின் ஆகப் பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில்தான் உள்ளன.
கோவாக்சின் எப்படி உருவானது?
பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களை ஆய்வகத்தில் டெஸ்ட் டியூபில் எளிதில் வளர்த்துவிடலாம். ஆனால், வெறும் மரபணு, அதை பொதியும் வகையில் சவ்வுப் புரதம், கூர்ப் புரதம் என சில புரதங்களின் தொகுப்பான கரோனா வைரஸ் மனித செல்களுக்கு வெளிய உயிர்ப்பு தன்மையோடு இருக்க முடியாது.
கடந்த 2020 மார்ச் மாதம் இத்தாலி போன்ற நாடுகளுக்கு பயணம் செய்துவிட்டு டெல்லி திரும்பிய கரோனா தொற்றாளர் ஒருவரிடமிருந்து எடுக்கப்பட்ட தொண்டை ஸ்வாப்பிலிருந்து கரோனா நுட்பத்தைக் கண்டுபிடித்து சாதனை படைத்தது பூனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம். மேலும், ஒருவகை குரங்கின் வெரோ (Vero CCL-81) செல்களில் ஆய்வகத்தில் இந்த வைரசை வளர்க்கும் நுட்பத்தையும் இந்த ஆய்வு நிறுவனம் நடத்திக்காட்டியது. அதுவரை சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டுமே கரோனா வைரசை ஆய்வகத்தில் வளர்க்கும் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
NIV-2020-770 என்று பெயரிடப்பட்ட இந்த கரோனா வைரசை செயற்கையாக ஆய்வகத்தில் வளர்த்து அதிலிருந்து செயலிழக்கப்பட்ட வைரஸ் தடுப்பூசி தயாரிக்கலாம் எனக் கூடுதல் ஆய்வுகளை மேற்கொண்டனர். வளர்த்த கரோனா வைரசை அறுவடை செய்து அதன் மீது பீட்டா புரோபியோலாக்டோன் (β-propiolactone) என்ற வேதிப் பொருளை பூசினால் வைரசின் மரபணு அதன் உயிரி செயல்பாட்டை இழந்துவிடும். அதன் கூர்ப்புரதம் போன்ற உடல் பகுதிகள் மட்டும் பாடம் செய்யப்பட்டு கிடைக்கும். இதைச் செயலிழந்த வைரஸ் தடுப்பூசியாகப் பயன்படுத்த முடியும் என தேசிய வைராலஜி நிறுவன ஆய்வாளர்கள் நிறுவினர்.
மேலும் ஆல்கெல்-ஐஎம்டிஜி (Algel-IMDG) எனும் அலுமினிய ஹைட்ராக்சைடு ஜெல் மீது இமிடாசோகுவினோலின் மூலக்கூறுகளைப் பதித்து தயார் செய்யப்படும் அட்ஜுவன்ட் எனப்படும் நோயெதிர்ப்பை தூண்டும் துணைப் பொருள் கரோனா தடுப்பூசிக்களை மேலும் வீரியம் கொள்ளச் செய்து, கூடுதல் பலத்துடன் நோயெதிர்ப்பு தன்மையை தரும் என்பதை தேசிய வைராலஜி நிறுவன ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
இந்தக் கலவையை ஆய்வுக்கூடத்தில் தயார் செய்து விலங்குகளிடம் பரிசோதனை செய்தனர். ஆய்வு பரிசோதனைக்காக வளர்க்கப்படும் வெள்ளெலிகளுக்கு இந்தத் தடுப்பூசியை தந்து அவற்றுக்குச் செயற்கையாக கரோனா தொற்று ஏற்படுத்தி பரிசோதனை செய்து செயலிழந்த வைரஸ் தடுப்பூசி கலவை நல்ல பலன் தருகிறது எனக் கண்டனர்.
பாரத் பயோடெக் ஒப்பந்தம்
தடுப்பூசி தயார் செய்ய ஆய்வக பரிசோதனை மட்டும் போதாது. தடுப்பூசி தொழிற்சாலையில் தயார் செய்து அதனைப் பரிசோதனை செய்ய வேண்டும். எனவே ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்துடன் தேசிய வைராலஜி நிறுவனத்தை நிர்வகிக்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) மே 2020-ல் ஒப்பந்தம் செய்துகொண்டது.
இதன் அடிப்படையில் BBV152 என்ற பரிசோதனை தடுப்பூசியை பாரத் பயோடெக் அதன் உயிரி காப்பு நிலை 3 (biosafety level 3) உற்பத்தி சாலையில் தயார்செய்தது. சுண்டெலி, எலி, முயல்களில் முதலிலும் பின்னர் பரிணாமத்தில் மனிதனுக்கு நெருக்கமான குரங்குகளிலும் இந்தப் பரிசோதனையை தடுப்பூசி தேசிய வைராலஜி நிறுவனம், சுகாதார அறிவியல் - தொழில்நுட்ப பயன்பட்டு ஆய்வு நிறுவனம் (Translational Health Science and Technology Institute) முதலிய ஆய்வு நிறுவங்கள் இணைந்து பரிசோதித்தன.
விலங்கு பரிசோதனைகளில் தடுப்பூசி ஆபத்தற்றது - நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டி பலன் தரக்கூடியது என அறிந்த பின்னர் தன்னார்வலர்கள் மீது மூன்று கட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
உள்நாட்டு உற்பத்தி
கோவாக்சின் தடுப்பூசியின் முக்கிய உட்கூறு ஆல்கெல்-ஐஎம்டிஜி எனும் அட்ஜுவன்ட். இந்த வேதிப்பொருள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. ஆயினும் வரும் காலத்தில் இந்த வேதிப்பொருளுக்கு தட்டுப்பாடு வந்து இந்தியா இறக்குமதி செய்ய முடியாமல் போய், வேற்று நாடுகளை நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்படும். இதை முன்கூட்டியே கணித்த இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம், மாற்று முறையில் இந்தப் பொருளை இந்தியாவில் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து, நான்கே மாதங்களில் வெற்றி கண்டது. இந்த மாற்று உற்பத்தி முறையின் தொடர்ச்சியாக இந்த மூலப்பொருள் இந்தியாவில் தயார் செய்யப்படுவதால்தான் கூடுதல் கோவாக்சின் உற்பத்தி பெருக்கம் சாத்தியம் ஆயிற்று.
தொடரும்...
கட்டுரையாளர்: விஞ்ஞானி, விக்யான் பிரச்சார், அறிவியல் தொழில்நுட்பத் துறை, புதுடெல்லி
தொடர்புக்கு tvv123@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT