Published : 18 May 2021 03:11 AM
Last Updated : 18 May 2021 03:11 AM
ஆந்திர அரசையும், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அமைச்சர்களை தரக்குறைவாக பேசி வருவதாக சொந்த கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரசைச் சேர்ந்த அதிருப்தி எம்.பி. ரகுராம் கிருஷ்ணம்ம ராஜூ தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.
குண்டூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட கிருஷ்ணம்ம ராஜூ போலீஸார் தன்னை லத்தியால் தாக்கியதாக கூறி காயங்களை நீதிபதிகளிடம் காட்டினார்.
இதையடுத்து மருத்துவமனைக்கு எம்.பி.யை அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து குணமடைந்தபின் சிறைக்கு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால், மருத்துவமனைக்கு எம்.பி.யை கொண்டு செல்லாமல் குண்டூர் சிறையில் அடைத் தனர்.
இந்நிலையில், குண்டூர் சிறையில் அடைக்கப்பட்ட எம்.பி.யைஉடனடியாக விஜய வாடாவில் உள்ள ரமேஷ் தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டுமென ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு பிறப்பிக்கபட்டாலும், அதற்கான கடிதம் எங்களுக்கு வரவில்லை என சிறை அதிகாரிகள் கூறியதால், ஞாயிற்றுக்கிழமை முழுவதும் சிறையிலேயே எம்.பி. இருந்தார்.
இதனிடையே, போலீஸார் அடித்ததில் காயங்கள் ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் எம்.பி. தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனை எதிர்த்து ஆந்திர அரசும், மனு தாக்கல் செய்தது. இரு தரப்பையும் விசாரித்த உச்ச நீதிமன்றம், எம்.பி.க்கு ராணுவ மருத்துவமனையில் பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து செகந்திராபாத் ராணுவ மருத்துவமனையில் ரகுராமுக்கு பரிசோதனை நடக்க உள்ளது.
இதற்கிடையே, ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தனுக்கு தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு எழுதிய கடிதத்தில், ஜனநாயகத்துக்கு விரோதமாக கிருஷ்ணம்ம ராஜூ கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT