Published : 17 May 2021 03:06 PM
Last Updated : 17 May 2021 03:06 PM
கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன் வரும் 20ஆம் தேதி பதவி ஏற்கிறார். அவருடன் சேர்ந்து 21 உறுப்பினர்கள் கொண்ட அமைச்சர்களும் பதவி ஏற்கின்றனர்.
இதில் இடதுசாரி ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்ற கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படுகிறது. அதாவது ஒரு எம்எல்ஏ வைத்திருக்கும் 4 கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கப்படுகிறது. இந்த 4 கட்சி எம்எல்ஏக்களும் தலா 30 மாதங்கள் அமைச்சர்களாகப் பதவி வகிப்பார்கள் என முடிவு செய்யப்பட்டது.
திருவனந்தபுரத்தில் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் மாநிலக் குழுக் கூட்டம் இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.
கேரள மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 99 இடங்களில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 2-வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்தது. மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக முதல்வராகப் பதவி ஏற்கும் நிகழ்ச்சியை பினராயி விஜயன் ஒத்திவைத்தார்.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் இன்று கூடிய இடதுசாரி ஜனநாயக முன்னணியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் வரும் 20ஆம் தேதி முதல்வராக பினராயி விஜயன் பதவி ஏற்பது என முடிவு செய்யப்பட்டது. முன்னதாக, மிகப்பெரிய கேக்கை முதல்வர் பினராயி விஜயன் வெட்ட, தேர்தல் வெற்றியை இடதுசாரி கூட்டணிக் கட்சியினர் கொண்டாடினர்.
இந்தக் கூட்டத்தில் இடதுசாரி கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளில் ஒரு எம்எல்ஏ மட்டும் வைத்திருக்கும் 4 கட்சிகளுக்கு அமைச்சரவையில் தலா 30 மாதங்கள் இடம் வழங்க முடிவு எடுக்கப்பட்டது.
ஜனநாயக கேரள காங்கிரஸின் ஆண்டனி ராஜு, இந்திய தேசிய லீக் கட்சியின் அகமது தேவர்கோவில் இருவருக்கும் அமைச்சர் பதவி அடுத்த 30 மாதங்களுக்கு வழங்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்பின், கேரள காங்கிரஸ் (பி) எம்எல்ஏ கே.பி.கணேஷ் குமார், காங்கிரஸ் (எஸ்) எம்எல்ஏ கடனப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோருக்கு அடுத்த 30 மாதங்கள் அமைச்சர் பதவி வழங்க முடிவு எடுக்கப்பட்டது.
இதில் லோக்தந்திரிக் ஜனதா தளம் எம்எல்ஏ கே.பி. மோகனனுக்கு அமைச்சரவையில் இடம் இல்லை.
கேரள காங்கிரஸ் (எம்) கட்சி தங்கள் சார்பில் எம்எல்ஏ ரோஸி அகஸ்டினை அமைச்சராக்க முடிவு செய்துள்ளது. மேலும் சட்டப்பேரவையில் கொறடா பதவியும் இந்தக் கட்சியைச் சேர்ந்த என்.ஜெயராஜுக்கு வழங்கப்பட உள்ளது.
இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் நாளை நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் தங்களின் சார்பில் அமைச்சர்கள் பெயர்கள் இறுதி செய்யப்படும். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட 12 பேரும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 4 பேரும் அமைச்சர்களாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சபாநாயகராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும், துணை சபாநாயகர் பதவி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வழங்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT