Published : 17 May 2021 01:57 PM
Last Updated : 17 May 2021 01:57 PM
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) கண்டுபிடித்த, தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவ கரோனா தடுப்பு 2டிஜி மருந்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இருவரும் இன்று முறைப்படி அறிமுகம் செய்தனர்.
''கரோனா நோயாளிகள் இந்த 2டிஜி மருந்தை வாய்வழியாக எடுத்துக்கொள்ளும்போது, விரைவாக குணமடைவார்கள். ஆக்சிஜன் உதவியோடு இருப்பவர்கள் எடுத்துக்கொண்டால் ஆக்சிஜன் தேவையிலிருந்து விரைவில் விடுபடுவார்கள். கரோனாவுக்கு எதிரான போரில் இது மைல்கல்'' என்று மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஹர்ஷவர்தன் புகழாரம் சூட்டியுள்ளனர்.
டி-டியோக்ஸி டி-குளுக்கோஸ் (2-டிஜி) ஆகியவற்றின் கலவையில், டிஆர்டிஓ-அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்), டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.
சென்டர் ஃபார் செல்லுலார் அண்ட் மாலிகுலர் பயாலாஜி (சிசிஎம்பி) உதவியுடன் டிஆர்டிஓ மற்றும் ஐஎன்எம்ஏஎஸ் அமைப்பினர் ஆய்வில் இறங்கினர். இந்த ஆய்வில் மருந்தின் மூலக்கூறுகள் கரோனா வைரஸுக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்பட்டன.
3 கட்ட கிளினிக்கல் பரிசோதனையிலும் டிஆர்டிஓ கண்டுபிடித்த 2-டிஜி மருந்து கரோனா நோயாளிகளுக்குச் சிறப்பாகச் செயல்பட்டது. குறிப்பாக ஆக்சிஜனை நம்பி இருக்கும் நோயாளிகளுக்கு நல்ல பலன் அளிக்கிறது. ஆக்சிஜனைச் சார்ந்து இருக்கும் நோயாளிகள் அது தேவைப்படாமல் விரைவில் மீள்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த 1-ம் தேதி டிஆர்டிஓ தயாரித்த 2-டிஜி மருந்தை அவசர காலத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள டிசிஜிஐ அனுமதி அளித்துள்ளது.
இந்த மருந்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகிய இருவரும் அறிமுகம் செய்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசுகையில், “கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சையில் புதிய நம்பிக்கையை 2டிஜி மருந்து அளிக்கும். நாட்டின் அறிவியல் வளர்ச்சியை, சக்தியை வெளிப்படுத்தும் மிகப்பெரிய உதாரணம் இந்த மருந்துதான். நாம் ஓய்வெடுத்து அமர்வதற்கு இது நேரம் அல்ல, நாம் களைப்படையவும் கூடாது.
2-வது முறையாக கரோனா அலை வந்துள்ளது. முழு எச்சரிக்கையுடன் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த மருந்து தயாரிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். குறிப்பாக டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சதீஸ் ரெட்டிக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த மருந்து பல கரோனா நோயாளிகளின் உயிர்காக்கும் மருந்தாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பேசுகையில், “இந்தியாவில் உள்ள கரோனா வைரஸுக்கு எதிராக மட்டுமல்ல உலகத்துக்கே இந்த 2சிஜி தடுப்பு மருந்து உதவப்போகிறது. கடந்த ஆண்டில் கரோனா வைரஸுக்கு எதிராகத் தடுப்பு மருந்தை நமது விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள். இந்த மருந்தின் மூலம் ஆக்சிஜன் தேவைக்குச் செல்லும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறையும், கரோனா நோயாளிகள் விரைவாக குணமடைவார்கள். கரோனா சிகிச்சையில் 2டிஜி மருந்து சிறந்த மைக்கல்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT